திருவனந்தபுரம்:
நவீன மாவோயிசத்திற்கு மார்க்சியம் அல்லது மாவோயிச சித்தாந்தத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மாவோயிஸ்ட்டுகள் தங்கள் தவறுகளை சரிசெய்து ஜனநாயக இயக்கத்தின் பகுதியாக மாறவேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை அழைப்பு விடுத்தார்.
சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்எம்.வி.கோவிந்தன் எழுதியுள்ள ‘காடு புகும் இந்திய மாவோயிஸ்ட்டுகள்’ என்கிற நூல் புதனன்றுவெளியிடப்பட்டது. சிபிஎம் மாநிலசெயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனிடம் நூலின் முதல்பிரதியை எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
1960-80 காலகட்டத்தில் உருவான நக்சலைட்டுகள் அல்லது தீவிரவாத நிலைப்பாடு மேற்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களின் பாரம்பரியத்துக்கு இன்றைய மாவோயிஸ்ட்டு களால் உரிமை கோர முடியாது.
உருவாக்கத்தின் போது மேற்கொண்ட நிலைப்பாட்டில் ஊன்றி நிற்பதல்ல, செயல்பாட்டு அனுபவங்களை உட்கொண்டு முன்னேறுவதே மார்க்சியம். இதற்குஇடமளிக்காததே மாவோயிஸ்ட் நிலைப்பாடு. மக்களிடமிருந்து கற்று மக்களுக்கு தலைமை தாங்கும் அணுகுமுறையை கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளாக மாற்றுவதில் மா சே துங் முக்கிய பங்கு வகித்தார். இதை முழுமையாக மறுப்பவர்கள் நவீன மாவோயிஸ்டுகள். சுரங்க மாபியாக்களே அவர்களின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகும். அவர்களுக்கு ஏகாதிபத்திய மற்றும் மத தீவிரவாத சக்திகளுடன் தொடர்பு உள்ளது. அவைமுற்போக்கான ஜனநாயகஇயக்கங்களுக்கு எதிரானவை. தவறாகப் புரிந்து கொண்டவர்களும் இருக்கக்கூடும். அவர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்து ஜனநாயக இயக்கத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று எஸ்ஆர்பி கூறினார்.
கொடியேரி பாலகிருஷ்ணன்
பயங்கரவாத நடவடிக்கை களால் சமுதாயத்தை மாற்ற முடியாது என்பதை மாவோயிஸ்டுகள் உணர வேண்டும் என்று கொடியேரிபாலகிருஷ்ணன் கூறினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்று அவர்கள் லஷ்கர்-இ-தைபாவைக் கூட நியாயப்படுத்துகிறார்கள். சிபிஎம்-ஐ பலவீனப்படுத்த தீவிரவாத குழுக்களுக்கு உதவும் நிலைப்பாட்டை காங்கிரஸ் எப்போதும் எடுத்துள்ளது. எல்டிஎப் அரசை கவிழ்க்க காங்கிரஸ் கட்சி தனது போராட்டத்தில் இத்தகைய சக்திகளைப் பயன்படுத்துகிறதுஎன்றார்.சிந்தா ஆசிரியர் டாக்டர். டி.ஜெயதேவதாஸ் நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கினார். எம்.வி.கோவிந்தன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சிபி நாராயணன், தேசபிமானி செய்தி ஆசிரியர் வி.பி.பரமேஸ்வரன், சிந்தா பொது மேலாளர் கே.சிவக்குமார் ஆகியோர் பேசினர்.