தேனி, ஏப்.17-300 கோடி ரூபாய் வரை செலவழித்தும் நம்பிக்கை இல்லாத நிலையில் 500- க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்ற துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் என் .ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.தேனியில் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் மனுதாக்கல் செய்த நாள் முதல் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகிறார் . வாக்காளர்களுக்கு வேட்டி -சேலை, பரிசு பொருள்கள் என நாள்தோறும் வழங்கி வருகிறார். கடந்த 4 நாட்களாக வீடுவீடாக ஓட்டுக்கு ரூ. 1000,ரூ.2000 என கொடுத்துவருகிறார்கள் . இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை . இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துவிட்டார்கள். இதற்கு மேலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குச் சாவடிகளை கைப்பற்ற திட்டம் தீட்டியுள்ளார்.
1200 வாக்குச்சாவடிகளில் 500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் குண்டர்கள் மூலம் கைப்பற்றி முகவர்கள், பணியாளர்களை வெளியேற்றி வாக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேர்தல் பார்வையாளர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம் .தேர்தல் அமைதியாக, நியாயமாக நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.பேட்டியின் போது காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பெத்தாட்சி ஆசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.