தேனி:
மணலுடன் பிடிபட்ட ஏழு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த வட்டாட்சியர் அதை விடுவித்தது மக்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
பிப்ரவரி 24- ஆம் தேதி போடி வட்டாட்சியர், போடி அரசு பொறியியல் கல்லூரி அருகே வாகனத் தணிக்கை செய்தபோது ஏழு டிப்பர் லாரிகளில் மணல் வந்துள்ளது. அவற்றை ஆய்வு செய்த போது, ராசிங்காபுரம் வேலப்பன் மகன் மணிகண்டசாமி பெயரில் உரிமம் பெறப்பட்ட மணல் குவாரியிலிருந்து மணல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த அனுமதிச் சீட்டில் உரிய நேரம் குறிப்பிடப்படாமலும், முறைகேடாக திருத்தம் செய்யப்பட்டும், கார்பன் தாள்கள் வைத்துஎழுதப்படாமல் இருந்துள்ளது. வாகனத்தின் ஓட்டுநர்கள் வட்டாட்சியரிடம் காலையில் பெறப்பட்ட நடைச் சீட்டை மாலை வரை பயன்படுத்தி மணல் அள்ளியதாகத் தெரி வித்துள்ளனர் .
இது குறித்து போடி காவல்நிலையத்தில் போடி லோகேந்திரனுக்குச் சொந்தமான டி.என்-45 .பி.ஜெ.9266, டி .என் -பி.கே-9112 ஆகிய டிப்பர் லாரிகள், போடி மாரிச்செல்வத்திற்கு சொந்தமான டி.என் -81-சி-2332 என்ற டிப்பர் லாரி, போடி குபேந்திரனுக்குச் சொந்தமான டி.என்-60 -கியூ.5521 என்ற எண் கொண்ட டிப்பர் லாரி, போடி அழகர்சாமிக்குச் சொந்தமான டிஎன்.-60-ஏஒய்-6246 என்ற எண் கொண்ட டிப்பர் லாரி,போடி வாசுதேவனுக்குச் சொந்தமான டி.என்.-28 -ஏகே-5485 எண் கொண்ட டிப்பர் லாரி, போடி கண்ணனுக்குச் சொந்தமான டி.என்.81-5532 என்ற என் கொண்ட டிப்பர் லாரி என மொத்தம் ஏழு டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போடி வட்டாட்சியர் செந்தில் பெயரில் முறைப்படி புகார் அளித்துள்ளார் .இதன் நகல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
அதன் பின் மணல் மாஃபியா கும்பல் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது. கொடுத்த வழக்கை வட்டாட்சியர் திரும்பப்பெற்றுள்ளார். இது தொடர்பான விபரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவிக்கையில், நீங்கள் சொல்லும் தகவலுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி குற்றமிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கோரிகையாகும்.