tamilnadu

img

கர்ப்பிணி பெண்ணை  நடுவழியில் இறக்கிவிட்டு ஆட்டோவை பறிமுதல் செய்த காவல்  ஆய்வாளர்

தேனி:
போடிநாயக்கனூரில்  கார்த்திகா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக  போடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆட்டோவில் சென்ற போது ஆட்டோவை வழிமறித்த நகர் காவல் ஆய்வாளர்  ஷாஜகான், நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அவரை ஆட்டோவிலிருந்து இறக்கி விட்டு , ஆட்டோ  ஓட்டுனர்  சதீஸ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளார் .
பின்னர் செய்வதறியாது தவித்த கார்த்திகா,  போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு நடந்து சென்றுள்ளார் .பின்னர்,  தான் வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்து மீண்டும் நடந்தே போடி நகர் காவல் நிலையத்திற்கு வந்து ஆட்டோவை விடுவிக்கும் படி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் காவல்துறையினர்  அவரை சமாதான படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் போடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபர்ணா என்ற கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற பாண்டியன் என்ற ஆட்டோ ஓட்டுநரையும் காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போதும் அபர்ணாவை நடுவழியில் இறக்கி விட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைப்பதாக கூறினர். ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் அபர்ணா நடந்தே அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

 கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இந்த சூழ்நிலையில் சிகிச்சைக்காக ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணியை நடு ரோட்டில் இறக்கிவிட்ட செயல் மனிதாபிமானமற்ற செயல் .இந்த தவறை  மூத்த  காவல் ஆய்வாளர் செய்துள்ளது வெட்கப்படவேண்டியதும் , வேதனை அளிக்கும் செயலுமாகும் .எனவே இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.