tamilnadu

img

திருஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.... அனைத்து விவசாயிகள் சங்கம், கட்சிகள் தொடர் போராட்டம் அறிவிப்பு....

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் – திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் திருவிடைமருதூர் – கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலையைஅரசே ஏற்று நடத்த கோரி தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும்அனைத்துக் கட்சிகள் சார்பில் கும்பகோணத்தில் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். இதில் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பாபநாசம், திருமண்டங்குடி சர்க்கரை ஆலை மற்றும் திருவிடைமருதூர் கோட்டூர் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்தவும், கரும்பு விவசாயிகள் மற்றும் கரும்புஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவலியுறுத்தியும் பிப்.9 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு பாபநாசம்அண்ணாசிலை அருகில் கரும்பு விவசாயிகள், கரும்பு ஆலை தொழிலாளர்கள், அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள், அனைத்து கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமண்டக்குடி, கோட்டூர் பகுதிகளில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலைகள் பல வருடங்களாக விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை வழங்காதது மட்டுமின்றி, விவசாயிகளுக்கே தெரியாமல் விவசாயிகள் பெயரிலும், கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்கள் பெயரிலும் கடன் வாங்கி, வங்கிகளில் மோசடி செய்தது.

இதுகுறித்து எதுவுமே தெரியாத அப்பாவி விவசாயிகளை கடனை திரும்பச் செலுத்த சொல்லி வங்கிகள் கடிதம் அனுப்பி நெருக்கடி கொடுத்து விவசாயிகளை அச்சுறுத்தியதோடு, மற்ற வேளாண் பயிர்கள் செய்ய விவசாயிகளுக்கு கடன் தர வங்கிகள் மறுத்துவருவதை கண்டித்தும், மோசடி செய்தசர்க்கரை ஆலை அதிபர் மற்றும் அதற்குதுணை போன வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி அரசால் தூர்வாரும் பணிகள் ஆளுங்கட்சியின் கல்லாவை நிரப்ப பெயரளவுக்கே நடைபெற்றதால், தூர்வாரும் நோக்கம் நிறைவேறாமல் வடிகால் வசதியின்றி கரும்பு வயல்களில் தண்ணீர் தேங்கி இதுவரை வடியாமல், கரும்புகள் அழுகியும், விளைச்சலில் பாதிப்பும் ஏற்பட்ட பின்னரும் அதிமுக அரசு எதையும் கண்டுகொள்ளாமல் எந்தவித நிவாரணத்தையும் கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை அறிவிக்கவில்லை. இரண்டு சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டதால் விவசாயிகள் வேறு வழியின்றி வேறு மாவட்டத்தில் உள்ள கரும்பு ஆலைகளில் விற்பனை செய்வதால், கரும்புகளை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வாகனச் செலவு அதிகமாகி பொருளாதார நஷ்டம் அடைகின்றனர்.மத்திய-மாநில அரசுகளின் மெத்தனப் போக்கால் பல மடங்கு விலைவாசி உயர்ந்தும், கரும்புக்கான கொள்முதல் விலையை கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தவில்லை, கரும்பு விவசாயிகளுக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தையும் 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை. கரும்புஆலைகளில் பணிபுரிகிற ஊழியர்களுக்கு பல வருடங்களாக ஊதியமும்வழங்கப்படாததால் தொழிலாளர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடுகின்றன. இதுகுறித்து அதிமுக அரசிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. 

எனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வாழ்வாதாரத்திற்கு வழியின்றி மன உளைச்சலில் இருக்கிற விவசாயிகளையும், கரும்பு ஆலையில் பணிபுரியும் ஊழியர்களையும் மீட்டெடுக்க அரசே கரும்பு ஆலையை கையகப்படுத்தி, நிர்வாகத்தை ஏற்று வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் உள்ள கடனை திரும்ப செலுத்த வேண்டும். ஆலைகளில் பணிபுரிந்த பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் தரவேண்டிய நிலுவை தொகையையும், பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தையும் வழங்குவதோடு கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாகவும் அறிவிக்க இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இதற்கான அரசாணையை அறிவிக்க வேண்டும்.

விவசாயிகள் கோரிக்கைகளை நிராகரித்தால் தில்லியில் போராடும் விவசாயிகளை போல் அனைத்து கட்சிகள், அனைத்து விவசாய சங்கங்கள், கரும்பு விவசாயிகள், ஆலை ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.கரும்பு ஆலைகள் விவசாயிகளிடம் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுபணிக்காக (செஸ்) வரி பிடித்த கோடிக்கணக்கான பணம் அவர்களிடம் உள்ளது. ஆனால் இதுவரை சாலை பணிக்காக ஒரு ரூபாய் கூட செலவிடாமல் அவர்களிடமே உள்ளது. இப்பணத்தை மீட்டு கரும்பாலை பகுதிகளில் உள்ள சாலைகளை தரமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.