தஞ்சாவூர், ஜூன். 24- பேராவூரணி அரசு கால்நடை மருத்துவமனை, சுற்றுச் சுவர் இல்லாத நிலையில், சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. எனவே இதனைத் தடுக்க கால் நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சாலையில், ஆண்டிக்கச்சல் இந்திரா நகர் பகுதியில், அரசு கால் நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டு 56 ஆண்டுகளைக் கடந்தும் இயங்கி வரும், கால்நடை மருத்துவமனையில், ஒரு கால்நடை மருத்துவர், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர், கால்நடை பாதுகாப்பு உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். இந்த கால்நடை மருத்துவமனையில் நான்கு புறமும் சுற்றுச்சுவர் இல்லாத நிலை உள்ளது. முன்புறம் இருந்த பழைய சுற்றுச்சுவரும் சிதி லமடைந்த நிலையில், சாலையை விட மிகத்தாழ்வாக உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயல் காரணமாக ஒரு பகுதி சுற்றுச் சுவர் கீழே விழுந்து விட்டது.
தற்போது நான்கு புறமும் திறந்த நிலையில் உள்ளது. இதனால் சாலைகளில் திரியும் கால்நடைகள் உள்ளே புகுந்து விடுகின்றன. மேலும், இரவு நேரங்களில் மருத்துவமனை வளா கத்தில் நுழையும் சமூக விரோதிகள் சீட்டு விளையாடு வதும், மது அருந்தி விட்டு, பாட்டில்களை வீசி உடைத்து விட்டும் செல்கின்றனர் எனக் கூறப்படுகிறது. இதனால், இங்கு பணியில் உள்ளோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த செ.சிவகுமார் என்பவர் கூறுகையில், “இப்பகுதியின் அடையாளமாக விளங்கும், கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். முதல் நடவடிக்கையாக நான்கு புறமும், சுற்றுச்சுவர் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் சார்பாக வலியுறுத்தி உள்ளார்.