தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே கல்லணையில், காவிரிக்கரையோரம் இறால் பண்ணை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கல்லணை, புதூர், பாதிரக்குடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் தலைமையில், பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் சம்சுதீன், திமுக பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் முருகானந்தம், வழக்குரைஞர்கள் சேகர், பைசல் ஆகியோர் அளித்த அம்மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் காவிரி கரையோரம் இறால் பண்ணை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாலனால் கட்டப்பட்ட, கல்லணையிலிருந்து காவேரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் உள்ளிட்ட ஆறுகள் பிரிகின்றன.
சுமார் 10 லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும், 5 லட்சம் மக்களின் உணவுத் தேவையையும் இவை பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லணையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் காவிரி கரையோரம் உள்ள வயல்வெளிகளில் இறால் பண்ணை அமைக்கும் பணி சில தனிநபர்களால் தீவிரமாக நடத்தப்படுகிறது. நன்னீரில் இரால் வளர்க்கப் போவதாக அவர்கள் கூறினாலும், பல இடங்களில் நன்னீரில் இறால் வளர்ப்பதாகக் கூறி, அமைக்கப்பட்ட பண்ணைகள் சுற்றுச்சூழலுக்கும், இயற்கைக்கும் எதிரான பெரும் சவாலாக மாறியுள்ளன. சுற்றுச்சூழல் நீரியியல் நிபுணர்களும் நன்னீர் இறால் பண்ணைகளால் வரும் கெடுதல்கள் பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர்.
உலக பொறியியல் அறிஞர்களேஅதிசயிக்கும், பாசன தொழில்நுட்பத்தை கொண்ட கல்லணையில், அதன் முகத்துவாரத்தில் திடீரென்று அமைக்கப்படும், இந்த இறால் பண்ணைகள் தனிப்பட்ட சிலருக்கு லாபம் தரலாமே தவிர, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பின்னாளில் பெரும் தீங்கு விளைவிக்கும். சுற்றுச்சூழல், குடிநீர், பாசனம், நிலத்தடி நீர் எல்லாவற்றுக்கும் ஆபத்தாக விளங்கும் இந்த, இறால் பண்ணை அமைப்பது குறித்து அங்குள்ள பொதுமக்களின் கருத்தும் கேட்கவில்லை. எனவே கல்லணையில் இறால் பண்ணை அமைக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.