தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ம.கோவிந்தராவ், தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 580 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். கூட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் அட்டையினை 25 பயனாளிகளுக்கு வழங்கியும், மின்சாரம் தாக்கி இறந்த, பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி அத்திவெட்டி கிராமம் சந்திரன் என்ப வர் குடும்பத்துக்கும், பாம்பு கடித்து இறந்த பட்டுக்கோட்டை வட்டம், பொன்னவராயன் கோட்டை உக்கடை கிராமம் சுப்பிரமணியன் மனைவி செண்பகவள்ளி குடும்பத்திற்கும் தலா ரூ.3,00,000 முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், சவுதி அரேபியா நாட்டில் பணியின் போது இறந்த, தஞ்சாவூர் வட்டம் தோழகிரிப் பட்டி, குருங்குளம் மேற்கு கிராமத்தை சேர்ந்த ஜெயசங்கர் பழனிசாமி என்பவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத்தொகை ரூ.52,021-க்கான காசோலையை அவரது சகோ தரி ஜெயப்பிரியாவிடமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் ரூ. 21,896 மதிப்பிலான தையல் இயந்திரம் 5 பயனாளிகளுக்கும் ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.