தஞ்சாவூர், செப்.23- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துறை மூலமாக மண்வள அட்டை வழங்கும் விழா மண்வள பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் கன்னியா குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஆடுதுறை மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் தூயவன் பேசுகையில், “மண்வள அட்டையை பயன்படுத்தி உரமிடவும், அதனைக் கொண்டு இனி வரும் காலங்களில் அதன் அடிப்படையில் மட்டுமே தனியார் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் உரம் பெறலாம். மேலும் தேவையான அளவு உரத்தினை பயிருக்கு வழங்கி நல்ல மகசூல் பெற்றிடவும் இந்த மண்வள அட்டையினை பயன்படுத்தி தேவைக்கேற்ப உரமிட்டு செலவினை குறைத்திடலாம்” என அறிவுறுத்தினார். மதுக்கூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் எம்.கலைச்செல்வன் இயக்கத்தில் கலந்துகொண்ட விவ சாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கினார். மேலும் மண்வள அட்டையின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பாபி செய்திருந்தார்.