தஞ்சாவூர்:
தஞ்சை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 8 திருநங்கைகள் காவலர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை சார்பில் சீமாங்க் திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தமிழகத்தில் முதன் முறையாக தஞ்சையை சேர்ந்த ராகினி, சத்யா, மயில், தர்ஷினி, ராஜேந்திரன், பாலமுரளி, முருகானந்தம், மணிவண்ணன் ஆகிய 8 திருநங்கை தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதுகுறித்து திருநங்கை எஸ்.சத்யா கூறியதாவது, இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் போது, எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் நோயாளிகளை மிகவும் அன்போடு வழி நடத்துவோம். நான் பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக, தஞ்சை பெரிய கோவிலில் தொண்டு நிறுவனம் மூலம் 5 ஆயிரம் சம்பளத்திற்கு பணியாற்றினேன். அங்கு கிடைத்த மதிப்பு தான் என்னை உயர வைத்துள்ளது என்றார்.
ராகினி கூறுகையில், இது ஒட்டு மொத்த திருநங்கை களுக்கும் கிடைத்த அங்கீகாரம். இனி சமூகத்தில் எங்களின் மதிப்பு உயரும். தமிழக அரசிற்கு நன்றி என்றார்.தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா பேசுகையில், திருநங்கைகள் ஒப்பந்த அடிப்படையில் முதலில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதம் 6,500 ரூபாய் சம்பளம் அளிக்கப்பட உள்ளது. இது அவர்களின் வாழ்வில் புதிய மாற்றத்தை தரும் என்றார்.