தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள், நாகை, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த, அதிவேக இயந்திரம் பொருத்திய, தங்குகடல் தொழில் செய்யும் விசைப்படகு மீனவர்களால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி, பிப்ரவரி 17 ஆம் தேதி கஞ்சித் தொட்டித் திறக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், மீன்வளத்துறையினர், தொழில் விதிகளை மீறியதாக 17 விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகளில், தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தங்கு கடல் மீன்பிடி தொழில் செய்வதால், இங்குள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் வந்தது. இதனடிப்படையில், மீன்வளத்துறை கடல் அமலாக்க பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் இரு பிரிவுகளாக பிரிந்து, விசைப்படகுகளில் மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தனித்தனியே ரோந்து பணிக்கு சென்றனர்.
இதில், சுமார் மூன்று கடல் மைல் தொலைவுக்குள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய நான்கு விசைப்படகுகள் உள்ளிட்ட தங்குகடல் மீன்பிடி தொழில் செய்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட 17 விசைப்படகுகள் மீது கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-இன் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.