கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, கொரோனாவுக்கு எதிரான யுத்தம் என்றே எல்லா நாட்டு அரசுகளும், மக்களும் கருதுகிறார்கள்.
கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியை எதிர்த்து நடத்தக் கூடிய யுத்தமாகும். இந்த யுத் தத்தில் மருத்துவர்களும், செவிலியர்களும் ராணுவ வீரர் களாக திகழ்கிறார்கள். அதி லும் குறிப்பாக, அரசு மருத்து வமனைகளில் பணியாற்றக் கூடிய மருத்துவர்களும், செவி லியர்களும்தான் அவ்வாறு விளங்குகிறார்கள். படாடோப மான தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் இந்த யுத்தத்தில் பெரும்பாலும் விலகி இருந்தே வருகின்றன. இப்போதுதான் அரசு மருத்துவமனைகளும், பொது சுகா தார மருத்துவ முறையும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மக்கள் உணர்கின்றனர்.
இந்த யுத்தத்தில் ராணுவ வீரர்களாக விளங்கும் மருத்துவர்களுக்கும், செவிலி யர்களுக்கும் கேடயமாக விளங்குவது அவர்கள் அணிய வேண்டிய பாதுகாப்புக் கவசங்கள் (PPE). கொரோனாவை ஒழிக்கக்கூடிய ஆயுதம் (மருந்துகள்) இன்னும் கண்டு பிடிக்கப்படாத நிலையில், கைவசமுள்ள மருந்துகளையும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்தித்தான் மருத்துவர்கள் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பல மருத்து வர்களும், செவிலியர்களும் பல நாடுகளில் மரணமடைந்தது பற்றிய தகவல்கள் வரு கின்றன. இத்தாலியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், முப்பதுக்கும் மேற்பட்ட செவிலியர்களும் இறந்துவிட்டனர். அமெரிக்காவில், இங்கிலாந்தில், ஸ்பெயினில், இன்னும் பல நாடுகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்களும், செவிலியர்களும் இறப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
டாக்டர் பெத்தூன்
போர், நோய்த்தொற்று போன்ற இக்கட்டான காலங்களில் சமூகப் பார்வையுள்ள மருத்துவர்களின் மருத்துவ சேவை மகத்தானது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான விடு தலைப் போர்களில் பங்குபெற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மகத்தான பணியை மருத்துவர்கள் ஆற்றியுள்ளார்கள். குறிப்பாக ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த விடுதலைப் போரில், கனடா நாட்டின் டாக்டர் நார்மன் பெத்தூன் ஆற்றிய பணி மனதை நெகிழவைக்கக்கூடியது.
டாக்டர் பெத்தூன், ஸ்பெயினில் பாசிச அரசுக்கு எதிராகப் போராடிய போராளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதலில் அங்கு சென்றார். அங்கிருந்து சீனாவுக்குச் சென்று ஜப்பானுக்கு எதிராகப் போராடிய செம்படை வீரர்களுக்குச் சிகிச்சை அளித்தார். நாள்தோறும் சுமார் 15-20 மணிநேரத்துக்கும் மேலாக ஓய்வின்றி தொடர்ச்சியாக அவர் வீரர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அவரைப் போதிய ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியும் அவர் கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில், அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் அவரை ஒரு அறையில் பூட்டி, கட்டாய ஓய்வளித்தது கட்சி. அவர் நள்ளிரவில் கதவைத் திறந்து பார்த்தபோது, தான் ஓய்வெடுக்காமல் அறையைவிட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்காக, சீன தேசத்து செம்படை ராணுவத்தின் தளபதி யாக இருந்த சூ டெ (Zhu de) ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து பாதுகாத்ததைப் பார்த்து, உணர்ச்சி வயப்பட்டு கண்ணீர்வடித்துள்ளார். அப்படிப்பட்ட டாக்டர். நார்மன் பெத்தூன் செம்படை வீரர்களுக்கு சிகிச்சை அளித்தபோது, அவருக்குக் கிருமித் தொற்று ஏற்பட்டு, செப்சிஸ் எனப்படும் ரத்தத்தில் நஞ்சு கலக்கும் நோய் தாக்கியது. யுத்தத்தில் காயம்பட்ட மற்றொரு வீரருக்கும் இதே நோய் தாக்கியிருந்தது. இருந்த ஒரேயொரு ஆன்டி-செப்டிக் ஊசியைத் தனக்குப் பயன்படுத்தாமல், அந்த செம்படை வீரருக்குப் பயன்படுத்தி அவரைப் பாதுகாத்தார் டாக்டர் நார்மன் பெத்தூன். செப்சிஸ் தீவிரமாகி அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு 1939 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி அவர் இறந்து விட்டார்.
“தோழர் பெத்தூனின் உணர்வு, தன்னைப் பற்றிய சிந்தனை ஏதும் இன்றி, பிறர் மீது அவர் கொண்ட முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவை, அவருடைய பணிகள் மீதான அவருடைய மாபெரும் பொறுப்புணர்விலும், அனைத்து தோழர்கள் மற்றும் மக்கள் மீதும் அவர் செலுத்திய மாபெரும் அன்பிலும் வெளிப்பட்டது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தோழர் மா சே துங், ‘நார்மன் பெத்தூனின் நினைவாக’ (In memory of Norman Bethune) என்ற தன்னுடைய ஒரு கட்டுரையில் புகழாரம் சூட்டியுள்ளார். இன்றும் டாக்டர் பெத்தூன் மறைந்த தினத்தை, ஆண்டு தோறும் சீனாவில், மக்களுக்கு சேவை செய்யும் சேவை தினமாக சீன மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
டாக்டர் கோட்னிஸ்
டாக்டர். நார்மன் பெத்தூன் மட்டுமல்ல, ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி போராடியபோது, இந்தியாவில் இருந்து டாக்டர் கோட்னிஸ் உள்ளிட்ட ஐந்து மருத்துவர்கள் சீனாவுக்கு சென்று சேவை புரிந்தார்கள். டாக்டர் பெத்தூனைப் போலவே, கோட்னிஸ், பாசு, அடல், சோல்கர், தேபேஷ் முகர்ஜி ஆகிய ஐந்து டாக்டர்களும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடி வந்த செம்படை வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மகத்தான பணிகளைச் செய்தார்கள்.
டாக்டர் கோட்னிஸ் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆனதுடன், அங்கேயே ஒரு சீன செவிலியரை மணந்தார். பின்னர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு 1942 ஆம் ஆண்டில், 32 வயதில் சீனாவிலேயே இறந்துவிட்டார். மராட்டியத்தின் சோலாப்பூர் நகரத்தில் பிறந்தவர் கோட்னிஸ். சீன தேசம் விடுதலை அடைந்த பிறகு, சீனதேசத்தில் இருந்து ஒரு குழு, சோலாப்பூர் வந்து அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரி வித்தது. சீனப் பிரதமர் சூ யென்லாய் இந்தியா வந்த போது, கோட்னிஸின் குடும்பத்தைச் சந்தித்தார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வந்தபோதும்கூட கோட்னிஸ் குடும்பத்தை சந்தித்துள்ளார். கோட்னிஸின் வாழ்க்கை வரலாற்றை, இந்தியாவின் முன்னோடி திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான வி. சாந்தாராம், டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி (டாக்டர் கோட்னிஸின் அமர காவியம்) என்ற பெயரில் திரைப்படமாக இயக்கி, நடித்து 1946 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
கியூப மருத்துவர்கள்
ஒரு கோடியே பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட கியூப தேசத்தின் மருத்துவர்களும், செவிலி யர்களும் எல்லை கடந்து நார்மன் பெத்தூன், கோட்னிஸ் போல, ஸ்பெயின், இத்தாலி, ஈரானுக்கு சென்று மகத்தான கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். சீன மருத்துவர்கள், ஈரானுக்கும் வேறு சில நாடு களுக்கும் போய் மருத்துவ உதவி செய்து வரு கிறார்கள். அமெரிக்க ஏதாதிபத்தியம் கியூப மருத்து வர்களைப் பயன்படுத்தக்கூடாது என மிரட்டி வந்தா லும், பல நாடுகள் அமெரிக்காவின் மிரட்டலை மீறி கியூப டாக்டர்களை அழைத்து உதவி பெற்று வரு கிறார்கள். ஆகவே, பொதுவாக விடுதலைப் போர் வீரர்களுக்கு சிகிச்சை அளித்தபோது மட்டுமல்ல, தற்போது கொரோனாவுக்கு எதிரான யுத்தத்திலும் மருத்துவர்கள் அயராது போராடி வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 50 க்கு மேற்பட்ட மருத்து வர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் தொற்று வந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 மருத்துவர்களும், 5 செவிலியர்களும் பாதிக்கப் பட்டுள்ளார்கள். கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடும் டாக்டர்களுக்குத் தேவையான பாது காப்புக் கருவிகளை அரசு வழங்கிட வேண்டும். ஆறு மணிநேர வேலை நேரம், 7 நாட்கள் பணிக்குப் பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உட்பட அரசு அவர்கள் பணியாற்றும் சூழலை முறைப்படுத்த வேண்டும்.
ஒட்டுமொத்தமாகக் கொரோனாவை எதிர்த்து நடத்த வேண்டிய யுத்தத்தில் மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணி யாளர்களின் பணிகள் மகத்தானது;போற்றப்பட வேண்டியது. அவர்களுக்கு உரிய பாதுக்காப்பை அரசு முறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே நம் நாட்டில், பணி ஓய்வுக்கு முன்பாகவே தூய்மைப் பணியாளர்கள் அதிகம் மரணமுற்று வரும் அவல நிலை இருக்கிறது. இப்போது கொரோனோ தொற்று வேறு நம்மையெல்லாம் உலுக்கி வருகிறது. இந்தச் சூழலில் தூய்மைப் பணியாளர்களின் பாது காப்புக்கும் அரசுகள் ஆவன செய்ய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியா ளர்கள் உதவி இல்லாமல் கொரோனாவை எதிர்த்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது.