tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-13 : கொலைத்தாண்டவம்-2002 எனும் “குஜராத் மாடல்”!

மத்தியில் வாஜ்பாய் அரசு நடந்த காலத்தில்தான் குஜராத்திலும் ஒரிசாவிலும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. அன்று 1998ன் கிறிஸ்துமஸ் தினம். குஜராத்தின் டேங் மாவட்டத்தில் “இந்து ஜாக்ரன் மஞ்ச்” எனும் சங் பரிவார அமைப்பு பேரணி நடத்தியது. அதற்கான தயாரிப்பாக அது வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களில் “கிறிஸ்தவர்களை விரட்டியடிக்குமாறு” அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. கொடுமை என்னவென்றால் இந்தப் பேரணியில் அந்த மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு மாலை மரியாதையை ஏற்றுக் கொண்டார், அங்கே கிறிஸ்தவர்களுக்கு எதிராப் பேசப்பட்டதை காது குளிரக் கேட்டுக் கொண்டார்!

பேரணி முடிந்ததும் அதில் பங்கேற்ற 2000த்திற்கும் மேற்பட்டோர் கும்பல் கும்பலாகப் பிரிந்து சென்று கிறிஸ்தவ தேவாலயங்களையும் பள்ளிகளையும் தாக்கினார்கள், தீ வைத்தார்கள். அன்று மட்டுமல்ல அந்த வாரம் முழுக்க இந்தத் தாக்குதல்கள் நடந்தன. மொத்தம் 28 தாக்குதல் வழக்குகள் பதிவாயின. அவற்றால் 32 தேவாலயங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் ஒரேயொரு தாக்குதல் மீதுதான் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. சங் பரிவாரத்திற்கும் போலீஸ் நிர்வாகத்திற்கும் அவ்வளவு நல்லுறவு! அப்போது அங்கே பாஜகவின் ஆட்சி நடந்து வந்தது. சொல்ல வேண்டுமா? நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டார்கள் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நான்கு எம்பிக்கள். அதைப் படித்துப் பார்த்தால் கிறிஸ்தவர்களை எதிரிகளாகப் பாவிக்கச் சொன்ன இவர்களது குருஜியின் கருத்தை நடப்புக்குக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது.

இதையெல்லாம் ஒன்றுமில்லையென்று ஆக்கியது ஒரிசாவில் நடந்த பயங்கரம். அங்கே மனோகர்பூர் மாவட்டத்தின் கியோஞ்ஹரின் பழங்குடியினருக்கு சேவை செய்து வந்தார் ஆஸ்திரேலியப் பாதிரியார் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டேன்ஸ். 1965லிருந்து அவர்களோடு வாழ்ந்திருந்து தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவரின் தொண்டுள் ளத்தைக் கண்ட மக்கள் அவரை “சாகிபோ” என்று பிரியமாக அழைத்து வந்தார்கள். அப்படி அவர்களுக்கு ஊழியம் செய்துவிட்டு 1999 ஜனவரி 22 நள்ளிரவில் தனது 9 வயது பிலிப், 7 வயது டிமோதியுடன் வேனில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த வேனோடு சேர்த்து அவர்களை எரித்துக் கொன்றது தாராசிங் எனும் கொடியவன் தலைமையிலான ஒரு கும்பல். இன வேறுபாடு பார்க்காமல் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து சேவை செய்த ஒரே பாவத்திற்காக இந்த கொடூரத் தண்டனை. அந்தப் பாலகர்கள் எப்படி துடிதுடித்துக் கதறியிருப்பார்கள்! நெஞ்சில் கருணையைத் துடைத்தெறிந்தவன்தான் மனுவாதியாகிறான்.

கொலைகாரன் தாராசிங் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவன் என்று பத்திரிகை செய்திகள் கூறின. ஆனால் உள்துறை அமைச்சர் அத்வானி உடன் தீர்ப்புச் சொன்னார்: “எனக்கு பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளைத் தெரியும். அவர்களுக்கு எவ்விதக் கிரிமினல் பின்புலமும் இல்லை”.(அவுட்லுக் 15-2-1999) எந்த அமைப்புக்கு? பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற பஜ்ரங் தள்ளிற்கு! அது சரி, அந்த இடிப்பிற்கு தலைமை தாங்கியவர் உள்துறை அமைச்சராக இருக்கும் போது அந்த அமைப்பிற்கு எப்படி கிரிமினல் பின்புலம் இருக்கும்?பஜ்ரங் தள் உள்ளிட்ட எந்த அமைப்போடும் தனக்கு தொடர்பு இல்லை என்று தாராசிங்கும் சொன்னான். பழைய பாணிதான். பழி தனிமனிதனைச் சார்ந்ததாக மாறியது. அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. பாதிரியார் ஸ்டேன்சுக்கும் தாராசிங்கிற்கும் என்ன பகை? வாய்க்கால் வரப்புத் தகராறா? தனிப்பட்ட மோதலா? ஏதுமில்லை. இருந்தது எல்லாம் கொள்கைப் பகையே. கிறிஸ்தவர்கள் இங்கே சேவை செய்யக் கூடாது. காரணம் அவர்கள் மத மாற்றம் செய்கிறார்கள். மத மாற்றம் என்பது அரசியல்சாசனம் தந்துள்ள அடிப்படை உரிமை. அது கொடுத்ததை இவர்கள் பறித்தார்கள் தங்கள் பயங்கரவாதச் செயல்களின் மூலம்.

அதே ஆண்டு ஆர்எஸ்எஸ் போட்ட தீர்மானம் கூறியது: “கிறிஸ்தவர்கள் போன்றவர்களுக்கு தங்கள் மதங்களைப் பின்பற்றுவதற்கு உள்ள உரிமையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தங்களது சகிப்புத் தன்மையற்ற மதங்களைப் பரப்ப அவர்களுக்கு அடிப்படை உரிமை உண்டா? தேசத்தின் ஒருமைப் பாட்டைத் தங்கள் நெஞ்சில் ஏந்தியுள்ள சங்கின் அனைத்துக் கிளைகளையும், இதர அர்ப்பணிப்புள்ள அமைப்புகளையும் அது அறைகூவி அழைக்கிறது-சர்ச்சின் நெறியற்ற மதமாற்றத் தந்திரம் எவ்வளவு ஆபத்தானது, சந்தேகத்திற்குரியது என்பதை அம்பலப்படுத்துங்கள்”. ஆக தனது பரிவாரத்தை இது விஷயத்தில் அது தூண்டிவிட்டது.

மதம் மாறும் உரிமை மனிதர்களின் அடிப்படை உரிமையா என்று ஆர்எஸ்எஸ்சுக்கு சந்தேகமாம்! அதிலென்ன சந்தேகம் இருக்க முடியும்? வயது வந்த ஒருவர், தனது பெற்றோரின் மதத்தைத்தான் கடைசிவரை பின்பற்ற வேண்டும் என்று எப்படி கட்டாயப்படுத்த முடியும்? கட்டாயப்படுத்துவது மனித விரோதம் அல்லவா? ஒரு மதத்தை ஆய்வு செய்து அதை நிராகரிக்க உரிமை இல்லையெனில் அது சிந்திக்கும் உரிமையையே பறிக்கும் அடாவடி. அதனால்தான் மதச்சார்பற்ற ஜனநாயக நாடுகளில் அந்த உரிமை குடிமக்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் சாசனமும் தந்துள்ளது. அதை மிரட்டல்கள் மூலம் நடைமுறையில் ஒழித்துக் கட்டுவதுதான் ஆர்எஸ்எஸ் அறைகூவலின் நோக்கம்.  இவர்களது இந்து ராஷ்டிரத்தில் மத உரிமை இருக்காது என்று சொல்லாமல் சொன்னார்கள்.1992ல் பாபர் மசூதியை இடித்தார்கள். பத்தாண்டு கழிந்தும் அந்த இடிப்புச் சத்தத்தின் எதிரொலி குஜராத்தில் கேட்டது. அயோத்தி சென்று திரும்பிய பக்தர்கள் மற்றும் கரசேவகர்களின் ரயில் கோத்ரா நிலையத்தில் தீப்பிடித்து எரிந்தது. 2002 பிப்ரவரி 27ல் நடந்த அந்தக் கோரச் சம்பவத்தில் 59 பேர் மாண்டு போனார்கள். அதைத் தொடர்ந்து குஜராத்தில் பிரளயம் வெடித்தது. அரசின் அதிகாரபூர்வக் கணக்குப்படியே அதில் மாண்டவர்கள் 1000 பேருக்கும் மேலே, காணாமல் போனவர்கள் 200 பேருக்கும் மேலே, காயம்பட்டவர்கள் 2500 பேருக்கும் மேலே. மரித்தவர்களில் முஸ்லிம், இந்து இரு தரப்பும் உண்டு என்றாலும் ஆகப் பெரும்பாலோர் முஸ்லிம்களே.

2002-04 காலத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர் வி. என். காரே. அவர் எழுதியகட்டுரையை (இண்டியன் எக்ஸ்பிரஸ் 14-10-2008)பிற்சேர்க்கையாகக் கொடுத்திருக்கிறார் நூரானி. அதில் கூறினார்: “பெஸ்ட் பேக்கரி மற்றும் பில்கீஸ் பானு வழக்குகளை உச்சநீதிமன்றம் மகாராஷ்டிராவிற்கு மாற்றியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைக் கண்ட நான் அவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும், சாட்சிகளுக்கும் பாதுகாப்பு தருமாறு உத்தரவிட்டேன். அது மீறப்பட்டால் உச்சநீதிமன்றத்திற்குச் சொல்லுமாறு கூறினேன். நான் அந்த (விசாரணை) கமிஷனில் இருந்தால் கலவரங்களைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காததால் மக்களின் உயிர்வாழும் உரிமையைக் காக்கத் தவறிவிட்டது போலீஸ் என்பேன்”.யாருடைய ஆட்சியில் குஜராத் போலீஸ் இந்தச் சான்றிதழைப் பெற்றது தெரியுமா? நரேந்திர மோடி ஆட்சியில்! அவர்தான் அன்று முதல்வர். அவர் நியமித்த நானாவதி கமிஷனின் ஒரு பகுதி அறிக்கை 2008 செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சூழலில் தலைமை நீதிபதி இப்படிச் சொல்லியிருந்தார். இதிலிருந்து அந்த கமிஷன் பற்றிய அவரின் அபிப்பிராயத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். முதல்வர் மோடி மட்டுமல்ல பிரதமர் வாஜ்பாயும் குஜராத் கொடூரத்தை ஒடுக்க உருப்படியாய் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அப்போது ஜனாதிபதியாக இருந்த கே. ஆர். நாராயணன் பின்னாளில் அளித்த ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டார்: “வாஜ்பாய் வலுவான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அவருக்கு நான் கடிதங்கள் அனுப்பினேன், நேரிலும் பேசினேன். வன்முறையாளர்களைச் சுட ராணுவத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் குஜராத் கொலைத்தாண்டவத்தை பெருமளவு தடுத்திருக்க முடியும். ஆனால் மாநில அரசும், மத்திய அரசும் அப்படிச் செய்யவில்லை”. (அவுட்லுக் 2-3-2005)மோடி நியமித்த நானாவதி கமிஷன் அவரைக் குற்றவாளியாக்கவில்லைதான். ஆனால், படுகொலைகள் நடந்த சில மாதங்களில், ஜூலையில் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்குத் தயாரானது அவர்தான், அதில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானது அவர்தான் எனும் உண்மையை எந்தக் கமிஷனாலும் மறைக்க முடியாது. இந்து, முஸ்லிம் என மக்களை மதத்தால் பிளப்பது பாஜகவிற்கே எப்போதும் ஆதாயமாக இருந்தது. அரசியல் லாபத்திற்காக மக்களின் உயிரோடு விளையாட அவர்கள் தயங்குவதில்லை என்பதையே இதை காட்டியது. அவர்களுக்கு மனசாட்சி கிடையாது, இருந்தது எல்லாம் மனுசாட்சியே! வர்ணாசிரம ஆட்சியை நிலைநிறுத்த எதையும் செய்யலாம் என்றது மனுவின் சமூக சாஸ்திரம் என்றால், அதையே சொன்னது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம். இந்த இரண்டையும் கக்கத்தில் வைத்தபடியே அவர்கள் நடந்தார்கள்.

அப்போதய குஜராத் தேர்தல் முடிவுகள் பற்றி ஆய்வு செய்த ரகீல் தத்திவாலா மற்றும் மைக்கேல் பிக்ஸ் வந்த முடிவு: “பாஜக நிச்சயம் வெற்றி பெறும் அல்லது நிச்சயம் தோல்வி அடையும் தொகுதிகளில் வன்முறை இல்லை. ஆனால் இதர மாவட்டங்களில் வன்முறை பயங்கரமாக நடந்தது, அங்கெல்லாம் பாஜகவின் வாக்கு கணிசமாக உயர்ந்தது”. (தி வயர் 15-12-2019) எப்படி திட்டமிட்டு வேலை செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா!நரோடா பாட்டியா படுகொலைகள் என்பவை குஜராத் கொடூரத்தின் ஒரு பகுதி. நரோடாவின் பாஜக எம்எல்ஏவாக அப்போது இருந்தவர் மாயா கோட்னானி. அந்தப் படுகொலைகளைத் தூண்டிவிட்டவர் அவர் எனும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது, வழக்கு நடந்து வந்தது. அவரைத் தனது அமைச்சரவையில் 2007ல் சேர்த்துக் கொண்டார் முதல்வர் மோடி. அந்த வழக்கின் முடிவு வெளியான செய்தியை தி வயர் ஏடு (20-4-2018) கூறியது:

“முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானியை நரோடா பாட்டிய படுகொலைகள் வழக்கிலிருந்து குஜராத் உயர்நீதிமன்றம் விடுவித்தது. குஜராத் கலவரங்களின் போது நடந்த அந்தக் கொடூரத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றமானது அவர் சதி செய்ததாகக் கூறியிருந்தது. எனினும் பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கியை உயர்நீதிமன்றம் குற்றவாளி என்று கூறியது. ஆனால் அவரின் தண்டனை காலத்தை ஆயுள் முழுக்க சிறை என்பதிலிருந்து 21 ஆண்டு சிறை என்று குறைத்தது. உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு உள்ளிட்டவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரித்தது. முன்னதாக சிறப்பு புலனாய்வு குழு கூறியிருந்தது-படுகொலைகள் நடந்த 2002 பிப். 28 காலை 9.30 மணி அளவில் அந்தப் பகுதியின் எம்எல்ஏ வாகிய டாக்டர் மாயா கோட்னானி விதான் சபாவில் இரங்கல் கூட்டத்தை முடித்துக் கொண்டு நூரான் மசூதி அருகே வந்தார். பதிவு செய்யப்பட்ட சாட்சியத்தின் படி ஓர் உரையை ஆற்றினார், பிறகு ‘முஸ்லிம் களைக் கொல்லுங்கள், அவர்களது சொத்துக்களை அழியுங்கள்’ என்றார்”.வழக்கிலிருந்து பின்னாளில் அவர் விடுதலையாகியிருக்கலாம். ஆனால் வழக்கு நடந்துவந்த போதே அந்தக் கொடூரக் கொலைகளில் குற்றம் சாட்டப்பட்ட
ருக்கு மந்திரி பதவி கொடுத்தார் மோடி என்பது கவனிக்கத் தக்கது. அதுவும் என்ன துறை? பெண்கள் மற்றும் குந்தைகள் வளர்ச்சி துறை. அந்தக் கொடூரத்தில் மாண்டுபோன 97 பேரில் 36 பேர் பெண்கள், 35 பேர் குழந்தைகள்! இதுதான் மோடிக்கு வளர்ச்சி! இதுதான் “குஜராத் மாடல்”! இந்த மாடலை முன்வைத்தவர் 2014ல் இந்தியாவுக்கே பிரதமரானார் பாருங்கள், அதுதான் இந்திய வரலாற்றின் கருப்பு அத்தியாயம்.

===அருணன்===

(நாளை முடியும்)