“மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ‘நீட்’ தேர்வை வலிந்து திணிக்கும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை புதுவை நாராயணசாமி தலைமையிலான அரசு எதிர்க்கும் நிலையில், தமிழகத்தில் எடப்பாடி அரசு மாணவர்களின் உயிரோடுவிளையாடிக் கொண்டு வருகிறது. இதன் விளைவு, மாணவர்களைக் கொல்லும் பலிபீடமாக நீட் மாறியிருக்கிறது”.இது ஒருபுறமிருக்க, நீட் தேர்வில் வெற்றி பெற்று லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்தாலும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொடூரத்தால் பாதிக்கும் மருத்துவர்களின் பரிதாப நிலையை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
29 வயதாகும் அந்த மருத்துவர் பெயர் அல்புர் வருண் தேஜ். ஆந்திராவைச் சேர்ந்தவர். நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பை முடித்தவர். அதன் தொடர்ச்சியாக, ‘குழந்தைகள் நலம்’ குறித்த முதுகலை படிப்புக்காக 2017ஆம் ஆண்டில் புதுச்சேரி மாநிலம் அறுபடை வீடு என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேருகிறார்.
பகல் கொள்ளை...
யூனியன் பிரதேசமாக இருந்தாலும் புதுச்சேரியின் கலாச்சாரமும், எல்லைகளும் தமிழகத்தோடு ஒன்றிணைந்ததாகும். எனவே அதைப்போன்றே இங்குள்ள தனியார் கல்லூரிகளும் கட்டணக் கொள்ளையில் ‘கொடி கட்டி’ பறக்கின்றன.கல்விக் கட்டணம் எவ்வளவு என்பதை அந்த கல்லூரி நிர்வாகம் நிர்ணயம் செய்யவில்லை. ஆனாலும், கட்டணம் கட்ட சொன்னதால் அல்புர் தருண் தேஜ் முதலாம் ஆண்டில் ரூ.38 லட்ச ரூபாய் செலுத்துகிறார்.இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்கிறார். இவர் மட்டுமல்ல இவரோடு சில மருத்துவர்களும் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு விசாரித்து நீதிமன்றம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து கட்டணத்தை நிர்ணயம் செய்ய ‘கட்டண குழு’ ஒன்றை அமைக்க உத்தரவிடுகிறது. வழக்குநிலுவையில் உள்ளதால் கட்டணம் நிர்ணயம் செய்யும் காலம்வரை இடைக்காலமாக 10 லட்ச ரூபாய் வசூலித்துக் கொள்ளவும் கல்லூரி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
அறுவடையின் சித்து...
ஆனால், கட்டணக் குழு அதன் பணிகளை துவக்காமல் காலம் கடத்துவதற்கு ஏதுவாகவும், இயங்காமல் இருக்கவும் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை ‘சித்து’வேலைகளையும் செய்த கல்லூரி நிர்வாகம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்று மாறி மாறி வழக்கைத் தொடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து காப்பாற்றிக் கொள்கிறது. இதனால் கட்டண குழுவால் ஒரு முடிவுக்கு வர முடியாமல்மூன்று ஆண்டுகளை கடந்தும் கட்டணத்தை நிர்ணயம் செய்யமுடியாமல் போனது.இத்தகைய சூழ்நிலையில், மருத்துவர் தருண் தேஜ்உள்ளிட்ட மருத்துவர்கள் முதுகலை படிப்பின் மூன்றாண்டுகளை 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்தனர். இவர்களில் மருத்துவர் தருண், ஜிப்மர் நடத்திய அகில இந்திய நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு முதல் மாணவராக தேர்ச்சி பெறுகிறார்.
“குழந்தை புற்று நோயியல்” துறையில் முனைவர் படிப்புக்கு விண்ணப்பம் செய்கிறார். ஜிப்மர் நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், உடனடியாக முதுகலை அசல் சான்றிதழ் கொடுக்க முடியவில்லை.
கொல்லும் கல்லூரி....
காரணம், முதுகலை படிப்பின் மூன்றாண்டு காலத்தில் 71 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்திய அவரிடம், மேலும் 67 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே அசல் சான்றிதழை கொடுப்போம் என்று அறுபடை வீடு கல்லூரி நிர்வாகம் தன்’கோர முகத்தை’ காட்டுகிறது.இதனால் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் தருண். இந்த விவரத்தை ஜிப்மருக்கும் தெரிவித்ததால் அசல் சான்றிதழ் வழங்க செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வரைக்கும்கால அவகாசம் கொடுத்துள்ளது.இந்த வழக்கை விசாரணை செய்து வந்த சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தருண் உள்ளிட்ட மருத்துவர்களின் அசல் சான்றிதழைஎக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக் கூடாது. கட்டணக் குழு தீர்மானிக்கும் கட்டணத்தை முழுமையாக செலுத்துவதற்கான பிரமாண (உறுதி மொழி) பத்திரம் வாங்கிக் கொண்டு உடனடியாக அசல் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் அறுபடைவீடு கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டளையிட்டது.
நீதிக்கு எதிராக...
ஆனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மனமில்லாத கல்லூரி நிர்வாகம், வங்கி உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே அசல் சான்றை தர முடியும் என்று செப்டம்பர் 8 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்கிறது.இதனால் மீண்டும் தலையிட்ட நீதிமன்றம், வங்கி உத்தரவாதம் குறித்து இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று விளக்கம் அளித்தது. மேலும், பிரமாண பத்திரத்தை வாங்கிக் கொண்டு அசல் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கறாராக உத்தரவை பிறப்பித்தது.
நீதி அவமதிப்பு...
ஜிப்மரின் விதிமுறைகளின்படி கால அவகாசம் வழங்கப்பட்ட தேதிக்கு பிறகு மேலும் ஒரு நாள் கூட நீட்டிக்க அனுமதி இல்லை என்பதால், தனது அசல் சான்றுக்காக மருத்துவர் தருண், நீதிமன்ற உத்தரவு நகலை அறுபடை வீடு கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த போதும் அவரது சான்றிதழ்களை தராமல் கல்லூரி நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளது.தானும் ஒரு விவசாயிதான், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றெல்லாம் கூறிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு சொந்தமானதுதான் இந்த அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
ஆதரவுக் கரம்...
தானடித்த மூப்பாக செயல்படும் தனியார் கல்லூரியின் அரக்கத்தனத்தால் இளம் மருத்துவர் அல்பூர் தருண் தேஜ் பாதிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம் இறங்கியது.
சிறப்பு மிக்கத் தீர்ப்பு...
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஸ்டாலின் அபிமன்யு, டி.ஆர். உதயகுமார், ஆர். செல்வி ஆகியோர் மருத்துவர் தருண் தேஜ் சார்பில் அவசர வழக்கை செப்டம்பர் 9 ஆம் தேதி தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அன்றே விசாரணை செய்து அசல் சான்றிதழ் இல்லை என்றாலும் தருணை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் எந்த காரணத்தைக் கொண்டும் அவரதுசேர்க்கை இடத்தை ரத்து செய்யக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியதால் “விழிபிதுங்கி நிற்கிறது” தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்.
இடுக்கண் களைந்த சிபிஎம்...
நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு, மருத்துவர் தருண் தேஜ் மட்டுமன்றி மருத்துவத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு கலங்கரை விளக்காகும். “உடுக்கை இழந்தவன் கை போல” உரிய நேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின்தலையீடு இந்த மாணவர்களின் வாழ்க்கையை பாதுகாத்துள்ளது என்றால் மிகையல்ல.
===சி.ஸ்ரீராமுலு==