பால்ய வயது முதல் சினிமா எனக்கு உயிர். பள்ளி, கல்லூரி நாட்களில் பாடமா? படமா? என்றால் படத்திற்குப் பிறகுதான் பாடம். பல சாகசங்கள் நிகழ்த்தி வகுப்புகளைப் புறக்கணித்து சினிமாவுக்குச் சென்ற அனுபவங்களை வைத்தே ஒரு சினிமாவை எடுத்துவிடலாம். எந்தப் படமாக இருந்தாலும் தியேட்டருக்கு வந்ததும் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்காவிட்டால் அன்று முழுவதும் எதையோ இழந்தது போலத் துடித்துப்போவேன். அந்த அளவுக்கு சினிமா பைத்தியம். ஒருகட்டத்தில் தமிழ்ச்சினிமாவிலிருந்து உலக சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. 1986-ல் நண்பர் எஸ்.இளங்கோ தலைமையில் சினிமா காதலர்கள் ஒன்றுகூடி ‘புதுகை பிலிம் சொசைட்டி’ என்ற அமைப்பை உருவாக்கினோம். உலக சினிமாக்களை தொடர்ந்து திரையிட்டு வருகிறோம். இன்றைக்கும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து திரையிடல் நடைபெறுகிறது.
சென்னை உலகத் திரைப்பட விழா மற்றும் பெங்களூரு உலகத் திரைப்பட விழாக்களில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக முழுமையாகப் பங்கேற்று வருகிறேன். பெரிய ஊர்திருவிழாக்களில் ஒருபக்கம் கரகாட்டம், ஒருபக்கம் நாடகம். இன்னொரு பக்கம் மேஜிக், சினிமா என பல நிகழ்ச்சிகள் ஒரே வளாகத்தில் நடைபெறுவதைப்போல திரைப்பட விழாக்களிலும் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான படங்கள் திரையிடப்படும். நாம்தான் தேர்வு செய்து பார்க்க வேண்டும். திரைப்படத் துறையைச் சார்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களும், திரைப்படக் கல்லூரி மாணவர்களுமே பெரும்பாலும் பங்கேற்பர். படத்தின் தொழில்நுட்ப ரீதியான அனுபவங்களை மட்டும் தங்கள் நண்பர்களுக்குள் பேசி சிலாகித்துச் செல்வர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழாக்கள் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. தமுஎகச நடத்திய பட்டுக்கோட்டை, திருப்பூர் மற்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் முழுமையாகப் பங்கேற்றுள்ளேன். உலகத் திரைப்படங்கள் குறித்த அறிவு பெரிதாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆர்வம் இருந்தால் போதும். அவர்களை உலகத் திரைப்பட அனுபவத்தை நுகரச் செய்துவிடுகிறது. கடந்த அக்.16-லிருந்து 20-ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது. வேறு திரைப்பட விழாக்களில் இல்லாத ஒரு உத்தி இங்கே கையாளப்படுகிறது. திரையிடலுக்கு முன்பாக படத்தின் இயக்குனர், படம் உருவாக்கப்பட்ட சூழல், படம் எடுக்கப்பட்ட காலம், அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி உள்ளிட்ட தகவல்கள் முன்னோட்டமாக சொல்லப்படுகிறது. படம் பற்றிய முழுக்கதையும் விவரிப்பது அல்ல. படத்திற்குள் நுழைவதற்கான ஒரு வாசல் மட்டுமே திறக்கப்படுகிறது. இப்பணியை இயக்குனர் சிவக்குமார் மிக நேர்த்தியாகச் செய்துவருகிறார். ஆரம்பகட்ட பார்வையாளனையும் படத்துத்துக்குள் ஒன்றிப் பயணிப்பதற்கு பேரூதவியாக இருக்கிறது.
முதல்நாள் திரையிட்ட படங்கள் மறுநாள் திரையிடலுக்கு முன் விவாதத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இதர திரைப்பட விழாக்களைவிட தமுஎகசவின் திரைப்பட விழாக்கள் இங்குதான் மாறுபட்டு நிற்கிறது. பார்வையாளர்களின் கோணத்திலிருந்து படம்குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. முத்தாய்ப்பாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், நாடகவியலாளர் பிரளயன் உள்ளிட்ட ஆளுமைகளின் தொகுப்புரை திரைப்படத்தை புதிய தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஐந்து நாட்களில் 22 திரைப்படங்கள். ‘டாப் 22’ என வரிசைப்படுத்த முடியாத அளவுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் சிறப்பு வாய்ந்த படங்கள். என்னை உருக வைத்த, அழ வைத்த, என் வாழ்க்கையை நேசிக்க வைத்த, பல படங்களில் Yara, Green Book, I Daniel Blake, Seventh Seal, Cold War, Summer with Monika, Capernaum, Roma, Patterson உள்ளிட்ட கதைப்படங்கள், Appola 11, Newyork Public Library உள்ளிட்ட ஆவண வகைப்படங்களும், Newton, Manto போன்ற ஹிந்தி படங்களும், Tolet என்ற தமிழ் படமும், இரண்டு நவீன மலையாளப் படங்களும், இயக்குனர் ஜான் ஆபிரகாமின் மேற்கோள்படி, வாழ்வியல் எதார்த்தங்களை புதிய கண்கொண்டு பார்க்க இத்திரைப்படங்கள் உதவியது என்றால் அது மிகையில்லை! பெர்க்மனின் Summer with Monika மற்றும் Seventh Seal போன்ற படங்கள், “ஒரு திரைப்படம் உண்மையைக் காட்டுவதற்கு மாறாக உயிரோட்டத்தோடு காட்டுவதுதான் நல்ல திரைப்படம்” என்ற அவரது மேற்கோள்படி உயிரோட்டமான படங்களாக அமைந்தன. மேலும், 1950-களிலேயே பெண்ணிய விடுதலை குறித்து Summer with Monika பேசியது வியப்பை உண்டாக்கியது. Seventh Seal என்ற பெர்க்மனின் மற்றொரு படம் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையேயான உரையாடல் வாயிலாக விவிலியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
ஆவணப்படம் என்றால், எடுத்துக்கொண்ட பொருளை மையப்படுத்தியே பேசும். ஆனால் Newyork Public Library என்ற ஆவணப்படம் நியூயார்கின் மைய நூலகம், அதன் 92 கிளைகளின் செயல்பாடு, அதன் பிரமாண்டம், கட்டமைப்பு பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் மூலம் அதன் நிதியினை உயர்த்துவதற்காக அதன் இயக்குனர்களின் கூட்ட நடவடிக்கைகள், நியூயார்க் நகரத்திலுள்ள வீடற்றவர்களை நூலகத்திற்கு வர வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பது, அச்சு வடிவத்தில் உள்ள புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்குவது உள்ளிட்டவைகளை மட்டும் பேசியிருந்தால் இது வழக்கமான ஆவணப்பட வரிசையில் சேர்ந்து இருக்கும். தலைமை நூலகம் மற்றும் அதன் கிளை நூலகங்களில் தினந்தோறும் நடக்கும் விவாதங்கள் மூலம் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளை கேள்வி, பதில்கள் மூலம் முன்வைத்து பார்வையாளர்களை பல கோணங்களில் சிந்திக்கவைத்ததே இந்த ஆவணப்படத்தின் வெற்றியாகும்.
அரசியல், தத்துவம், இசை, நாடகம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிறவெறியின் கொடுமை, மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான தீர்வுகள், வாழ்வைப் பற்றிய சமகால பார்வைகள், இலக்கியம் குறித்த கலந்துரையாடல்கள், இலக்கிய விமர்சனம் உள்ளிட்ட பல பல தலைப்புகளில் நடைபெற்ற விவாதங்களை காட்சிப்படுத்தியதன் மூலம் பார்வையாளர்களின் மனதில் சொல்லொண்ணா கேள்விகளை விதைத்து உள்ளது. மூன்றரை மணி நேரம் போனதே தெரியாதபடி பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு நகர்த்திய அதிசயமான ஆவணப்படம் இது. முற்போக்காளர்கள், கல்வியாளர்கள், ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள் அவசியம் பார்க்கவேண்டிய படம். ஐந்து நாட்களும் திரையுலக ஆளுமைகள் பங்கேற்று உலக சினிமா ரசனை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து திரைப்பட விழாவுக்கு மெருகூட்டினர். புதிய இயக்குனர்களே மக்களிடம் செல்லுங்கள், கதைக்கான கருக்களை அவர்களிடம் தேடுங்கள். தமிழ் இலக்கிய ஆளுமைகளின் சிறுகதைகளை ஆழமாக வாசியுங்கள். சினிமாவுக்கான ஆயிரக்கணக்கான கதைகள் அங்கே கொட்டிக்கிடக்கிறது. அதிலிருந்து படங்களை எடுங்க முன்வாருங்கள் என் அழைப்பு விடுத்தார் எடிட்டர் லெனின்
உலக சினிமாக்களை பாருங்கள். தரமான தமிழ் படங்களையும் தேடிப் பாருங்கள் என்றார் இயக்குனர் லெனின் பாரதி, உலக திரைப்படத்தை சமூக அரசியல் பார்வையோடு எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதை ரஷ்யப் படமான Loveless என்ற படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு விளக்கினார் இயக்குனர் பிரம்மா, நல்ல திரைப்படம் எடுப்பதற்கு, கருத்து சுதந்திரம் அவசியம் எனக் குறிப்பிட்டார் இயக்குநர் கோபிநயினார். மேலும், சமகால அரசியல் பிரச்சினையோடு நிறைவுரையாற்றிய தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, தொடர்ச்சியாக கலை இலக்கியத் தளத்தில் இயங்குவதன் அவசியத்தை விளக்கினார். துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.கருணா நிகழ்வுகளை நேர்த்தியாக ஒருங்கிணைத்தார். துணைப்பொதுச் செயலாளர் களப்பிரன் நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாட்டில் திருவண்ணாமலை தோழர்களின் பணி மெய்சிலிர்க்க வைத்தது. கதை, கவிதை என இயங்கி வந்த தமுஎகச கடந்த சில வருடங்களாக நாடகத்துறையிலும், சினிமாத் துறையிலும் ஆக்கப்பூர்மமான பங்களிப்பைச் செய்து வருகிறது. எல்லாம் டிஜிட்டல்மயமாகிவரும் உலகில் நம்முடைய கருத்துக்கள் வெகுமக்களிடம் கொண்டுசெல்ல இதுபோன்ற காட்சி ஊடகங்களை கையில் எடுப்பது காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை. அதை உணர்ந்து பணியினை முன்னெடுத்துவரும் தமுஎகசவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.