tamilnadu

img

மக்கள் ஆதரவை இழந்த அரசின் அறிகுறி

கட்சியைவிட நான் பெரியவன் என்று ஒரு தலைவன் நினைக்கும் போது, ஜனநாயகத்தில் பிரச்சனை தொடங்கிவிடுகிறது என்று பிரபல திரைப் பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஷ்யாம் பெனகல் கூறியுள்ளார். மும்பையில் தி இந்து செய்தியாளர், ஷ்யாம் பெனகலை நேர்காணல் கண்டபோது அவர் கூறியதன் சாராம்சம் வருமாறு:ஓர் அரசாங்கம் மக்களின் பேச்சுரிமை யின் மீது கட்டுப்பாடு கொண்டுவர முயற்சிக்கிறது என்றால், அது மக்களின் ஆதரவை இழந்து ஒரு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை உணரத் தொடங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும்.

அறிவற்ற செயல்

தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக நகரங்களின் பெயர் களை ஆட்சியாளர்கள் மாற்றுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஷ்யாம்பெனகல் பதிலளிக்கையில், மகாதேவ் தான் எழுதிய கதை ஒன்றில், ஜவஹர்லால் நேரு, துர்ஜான்பூர் என்ற கிராமத்தின் பெயர், ‘போக்கிரிகளின் நகரம்’ என்று பொருள்படக்கூடிய விதத்திலிருந்ததால், அதனை ‘குணமிக்கவர்கள் வாழும் நகரம்’ என்று பொருள் தரக்கூடிய விதத்தில் சஜ்ஜன்பூர் என்று மாற்றினாராம். ஆனால் அவ்வாறு மாற்றிய பின்னர், துர்ஜான்பூரில் மிகவும் நாகரிகமாக வாழ்ந்து வந்தவர்கள், தங்கள் கிராமத்தின் பெயர் சஜ்ஜன்பூர் என்று மாற்றப்பட்ட பின்னர் உண்மையிலேயே போக்கிரிகளாக மாறிவிட்டார்களாம். எனவே ஊர்ப் பெயர்களை மாற்றும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.‘‘இப்போது இதேபோன்றதொரு நிலைமை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக் கிறது. அலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என மாற்றி இருக்கிறார். ‘இது மிகவும் அறிவற்ற செயலாகும்’. என்று 84வயதாகும் ஷ்யாம் பெனகல் கூறியதுடன், ‘‘நாளை ஹைதராபாத் நகரின் பெயரில் முஸ்லிம் வாடை வீசுவதால் அதனையும்கூட மாற்ற முயலலாம்’’ என்று கூறினார்.

ஜனநாயக நாடு என்பதன் அர்த்தம்

“தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப் பட்ட பின்னர் நாட்டிலுள்ள அரசியல் கட்சியினர் பலர் அமைதியாகவும் இணக்கத்துடனும் வாழும் மக்களிடையே மதவெறி உணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். முஸ்லிம்களை ஓரங்கட்டவும், அவர்கள் மீது ‘ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள்’ என்று முத்திரை குத்தவும் முயற்சிக்கிறார்கள்’’ என்றார்.‘‘நம் நாட்டில் மதவெறி தேர்தல் சமயங்களில் மக்களிடையே வெறித் தனத்தை ஊட்டுவதற்காக முன்னுக்கு வந்துவிடுகிறது. இவ்வாறு மக்களின் மத்தியில் கூருணர்வினை ஏற்படுத்தி, தங்களுக்கு சாதகமாக ஆதாயம் அடைந்திடமுயற்சிக்கிறார்கள்’’ என்றும் பெனகல் கூறினார்.‘‘நம் நாட்டின் ஜனத்தொகையில் பெரும்பகுதியினர் இந்துக்கள். எனவே இவர்கள்இங்கே வாழும் மதச் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் விதத்தில் நடத்தாமல் அவர்களுக்கு அவர்களைக் கண்ணியத்துடன் நடத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் நாடு ஒரு ஜனநாயக நாடுஎன்பதன் அர்த்தம் மதச்சிறுபான்மை யினரும் பாதுகாப்புடன் வாழ முடியும் என்றநிலை இருக்கும்போதுதான். இல்லை யேல், நம் நாடு ஒரு ஜனநாயக நாடு என்று சொல்வதில் அர்த்தம் ஏதுமில்லை’’ என்று பெனகல் கூறினார்.

ரவுடிக்கு எதிராக...

“சஜ்ஜன்பூரில் நடைபெற்ற தேர்தலின் போது ஒரு ரவுடிக்கு எதிராக ஒரு மூன்றாம் பாலினத்தவர் போட்டியிட்டார். இவர், கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன் வைத்து மக்களிடையே வாக்கு கேட்டார். ரவுடியோ, மக்களை மிரட்டி, அச்சுறுத்தி வாக்கு கேட்டார். தேர்தல் முடிவுஎன்ன தெரியுமா? மூன்றாம் பாலினத் தவரைத்தான் மக்கள் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள்’’ என்று கூறிய ஷ்யாம் பெனகல், ‘‘ஜனநாயக அமைப்பில் ஓர் அர சியல் கட்சியின் தலைவன், தன்னை அந்தக் கட்சியைவிட பெரியவன் என்று நினைக்கத் தொடங்கும்போது, அந்நாட்டிலுள்ள ஜனநாயக அமைப்பிற்குப் பிரச்சனை உருவாகி விடுகிறது’’ என்றார். ‘‘இதேபோன்ற நிலைமைகளை நாம் முன்பு இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் காலத்திலும் பார்த்தோம். இப்போது மீண்டும் அதுபோன்ற நிலைமை வந்திருக்கிறது’’ என்றார்.‘‘கடந்த நாற்பதாண்டுகளாக நான் இந்த சமூகத்தை உன்னிப்பாகக் கவனித்துவந்திருக்கிறேன். நாட்டின் அரசியலில்ஏற்பட்ட மாற்றங்களை என் திரைப்படங் களிலும் பதிவு செய்திருக்கிறேன். நாட்டின்அமைப்பில் ஏற்பட்டு வந்த பல்வேறு மாற்றங்களையும் என் படைப்புகளிலும் கொண்டு வந்திருக்கிறேன். இதனை நான்என் ஆரம்பகால ஆவணப்படங்களி லிருந்தே தொடங்கிவிட்டேன்’’ என்று ஷ்யாம் பெனகல் கூறினார்.

தீய அம்சங்களுக்கு எதிராக...

‘‘உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ உங்களைச் சுற்றி உங்கள் நாட்டிலும், உலகிலும் நடைபெறும் தீயஅம்சங்களுக்கு எதிராக, நீங்கள் செயல்பட்டுத்தான் ஆக வேண்டும்’’ என்றும் பெனகல் வலியுறுத்தினார்.‘‘அந்தவிதத்தில்தான் நான் என் திரைப்படங்களையும் உருவாக்கினேன்’’ என்று கூறும் அவர், ‘‘1974இல் வெளிக் கொணர்ந்த ‘ஆங்கூர்’ என்னும் திரைப்படத்தில், கிராமப்புறங்களில் வீழ்ந்துவரும்நிலப்பிரபுத்துவ அமைப்பைக் காட்டி யிருந்தேன், 1975இல் தெலுங்கானா வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டத்தை ‘நிஷாந்த்’ திரைப்படத்தில் காட்டியிருந் தேன், அடுத்து 2009இல் வெளியிட்ட ‘வெல் டன் அப்பா’ (றுநடட னுடிநே ஹbயெ) என்னும் திரைப்படத்தில் சாமானிய மனிதர்களின் மீது அதிகார வர்க்கத்தினர் நாள்தோறும் மிகவும் ஆழமான முறையில் ஏற்றி வந்த சுமைகளைச் சுட்டிக்காட்டி இருந்தேன்’’ என்று பெனகல் கூறினார்.

பிரச்சார நோக்கத்துடன்

‘‘இந்திப் படங்கள் கூட சமீப காலங் களில் இந்திய அரசியலைப் படம்பிடித்துக் காட்டக்கூடிய விதத்தில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன’’ என்று கூறியபெனகல், ‘‘இப்போது தேர்தல் அறிவிக்கப் பட்ட பின்னர், தங்கள் அரசியல் ஆதா யத்திற்காக திரைப்படங்கள் வெளியிட முயன்றதையும் பார்த்தோம்’’ என்றும் கூறினார்.‘‘இந்தப் போக்கை எப்படி நீங்கள் பகுப்பாய்வு செய்கிறீர்கள்?’’ என்று கேட்டபோது, நீங்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரைப் பற்றி படம் எடுக்கும்போது, ஒன்று அவரை அது விமர்சிக்கத்தக்க விதத்திலும் இருந்திடும் அல்லது அவரை ‘வரலாற்று நாயகன்’ என்பது போன்று முகத்துதி செய்யக்கூடிய விதத்தில் அமைந்திடும். அந்தப் படம் ஒருவரை விமர்சிக்கக்கூடிய விதத்தில் இருந்தால், அதனால் நன்மையும் உண்டு, அனுகூலமும் உண்டு, தீமையும் உண்டு. எப்படி அந்த நபர் அரசியலில் உயர்ந்தார் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும். ஆனால், முகத்துதி செய்வதற்காக உருவாக்கும் படம், பிரச்சார நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும்’’ என்றார்.

பாதுகாப்பற்ற நிலையின் அறிகுறி...

படத்தணிக்கை முறை மற்றும் பேச்சுரிமை மறுக்கப்படுதல் குறித்து கேட்கப்பட்ட போது, பெனகல் ‘‘ஏற்கனவே, நம் நாட்டில் படத் தணிக்கை என்பது மிகவும் முட்டாள்தனமான முறையில் மேற் கொள்ளப்பட்டு வருவதைப் பார்த்து வருகிறோம். இதற்கு அரசாங்கம்தான் காரண மாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை’’ என்று சொல்லிய பெனகல், அதேசமயத்தில் ‘‘பேச்சுரிமை மீது கட்டுப்பாடு கொண்டுவர ஓர் அரசாங்கம் முயற்சிக்கிறது என்றால், அது மக்களின் ஆதரவை இழந்து ஒரு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை உணரத் தொடங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும்’’ என்றும் கூறினார்.யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு ஷ்யாம் பெனகல் விடை பகீர்கையில், இதற்குத் தான் மூன்று எளிய விதிகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறினார்.‘‘உள்ளாட்சி அமைப்புகளுக்கான அளவில், சிறந்த நபரா என்று பார்ப்பேன். மாநில சட்டமன்றத்திற்கான தேர்தலில் நான் சார்ந்திருக்கிற தொகுதிக்கு எவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பயனளிக்கும் என்று பார்ப்பேன். நாடு தழுவிய அளவில் நாடாளுமன்றத்திற்கான தேர்தலாக இருப்பின், தேசிய அரசியல் அளவில் பார்ப் பேன். போட்டியிடுபவர்களின் வல்லமை மற்றும் நம்பிக்கைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பேன். ஆனால் நிச்சயமாக அடிக்கடி கட்சி மாறுபவர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருக்கமாட்டேன்’’ என்று ஷ்யாம் பெனகல் கூறினார்.


நன்றி: தி இந்து

தமிழில்: ச. வீரமணி