கலைவாணர் என்.எஸ்.கே. என்று தமிழக மக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் நாகரீகக் கோமாளி என்பதாகும். தமிழ் கூறும் நல்லுலகை 1936 முதல் 1957 வரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நிகரற்ற கலைஞர் கலைவாணர் சோஷலிச சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று அங்கு கண்டு வந்ததைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசியவை காலத்தால் அழியாதவை.சோவியத் ரஷ்யா குறித்து கலைவாணர் “மதபீடத்தில் சாயாத, மதியை இழக்காத நாடு” எனப் புகழ்ந்தார். மேலும் “பொன்னாடு, தர்மபுரி, உல்லாசமிகுந்த சோலைவனம், அறிவு நிறைந்த கலைக்கூடம்” என்றெல்லாம் வாயாரப் புகழ்ந்து பேசினார். கலைவாணர் அந்நாட்டுடன் நம் நாட்டை ஒப்பிட்டுப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. “ உலகம், மாயை, காயம், பொய் என்ற வேத பாராயணம் அல்ல..தொழில் பெருக்கம், அறிவு வளர்ச்சி, நல்ல ஆற்றல், வாழ்க்கையில் இன்பம் எல்லாம் காண்கிறோம் அங்கு ரஷ்யாவில்! கடவுள், மதம், சாதிமதம், பழைய புராணப் பண்பாடுகளுக்கு இருப்பிடம் இங்கு இந்நாட்டில் நிலவுவது” என்றார். மேலும் “வாழ்கின்ற மக்கள் முப்பத்து முக்கோடி என்றால், சூழும் பேதங்கள் அந்தத் தொகை இங்கு நம் நாட்டில் காண்பது. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் சரிசமம் என்னும் நிலை அங்கு ரஷ்யாவில் காணப்படுவது” எனப் புகழ்ந்தார். சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று வந்த எந்தக் கலைஞரும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைப் போல் சோஷலிச சோவியத் ரஷ்யாவின் அருமை பெருமைகளை விரிவாக வியந்தும் புகழ்ந்தும் பேசியதில்லை. அந்தளவிற்கு மண்ணில் சொர்க்கம் எனும் மாண்புகளை நேரடியாகக் கண்டும் கேட்டும் ஒன்றிப் போனவராய்த் திகழ்ந்தார் கலைவாணர்.
(இன்று ஆகஸ்ட் 30 கலைவாணர் நினைவு நாள்)
===பெரணமல்லூர் சேகரன்===