சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் பல தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கும், நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை அடுத்து, தமிழக அரசு இதில் இருந்து ஒரு வருடம் விலக்கு வழங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்றது.
இதற்கிடையில் கடந்த மக்களவை தேர்தலின் போது, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவதாக அதிமுக அரசு, அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட படிப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், யோகா மற்றும் நேச்சரோபதி படிப்புக்கு மட்டும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.