விஜயவாடா, ஏப்.26-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், மாபெரும்மார்க்சிய சிந்தனையாளருமான தோழர் எம். பசவபுன்னையா, 27ஆவதுநினைவு தினம் விஜயவாடாவில் உள்ள எம்.பசவபுன்னையா விஞ்ஞான மையத்தில் கடந்த ஏப்ரல் 12 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் பி.மது, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தோழர் பசவபுன்னையா அளித்திட்ட பங்களிப்பினை விளக்கினார். கட்சிக்கு, மிகவும் இக்கட்டான நிலைமையில் மிகவும் தெளிவான திசைவழியை அவர் காட்டியதை நினைவு கூர்ந்தார். இன்றைய இளைஞர்கள் தோழர் எம்.பசவபுன்னையாவின் எழுத்துக்களை கற்க வேண்டும் என்றும் அதன்மூலம் கம்யூனிச உணர்வையும் தர்க்கவியல் அணுகுமுறையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வி.சீனிவாசராவ் பேசுகையில் தனக்கு தோழர் பசவபுன்னையாவுடன் ஏற்பட்ட சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஒய். வெங்கடேஷ்வரராவ், தோழர் பசவபுன்னையா காலனியாதிக்க காலத்தில் மாணவராக இருந்த சமயத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் மேற்கொண்ட இயக்கங்களை விளக்கினார். (ந.நி.)