tamilnadu

img

தட்டச்சர் தேர்விலும் முறைகேடு

மதுரை, பிப். 7- மதுரையில் கடந்த வருடம் நடந்த தட்டச்சர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தட்டச்சர் தேர்வு நடந்தது. இதில்  மதுரை கொன்ன வாயன் சாலை-தீக்கதிர் இணைப்புச் சாலையில் உள்ள ஒரு  இன்ஸ்டியூட் மூலம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த  ஆர்.விக்னேஷ்,   எம்.மரகதம் ஆகியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தத் தேர்வில் ஏற்கனவே வெற்றிபெற்ற விக்னேஷ் என்ற மாணவர் மரகதம் என்ற பெண்ணிற்கு ஆள் மாறாட்டம்  செய்துள்ளதாக புகார் வந்ததையடுத்து, இதை விசாரிப்பதற்காக கல்லூரி முதல்வர்கள் இரண்டு பேர் கொண்ட விசாரணைச் குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் இவர்கள் இரண்டு பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று விசாரணைக் குழு மூலம் கூடுதல் இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் கடந்த மே மாதம் கூடுதல் இயக்குனர், மரகதத்திற்கு தட்டச்சு தேர்வு நடத்தியதில் அவருக்கு தட்டச்சு செய்ய தெரியாதது தெரியவந்தது.

இது தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் , இந்த முறை கேட்டிற்கு  சம்பந்தப்பட்ட இன்ஸ்டிடியூட் உரிமையாளர் சின்னத்துரை உடந்தையாக இருந்துள்ளதாகவும்  அவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் கூடுதல் இயக்குநர் அருளரசு மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரின் பேரில் விக்னேஷ், மரகதம், நாதன் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் சின்னத்துரை ஆகிய மூன்று பேர் மீதும் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வாய்ப்புள்ள தாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.