புதுதில்லி
சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ஜீவஜோதி உணவக மேலாளரின் மகள் ஆவார். அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். இந்நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்ய விரும்பிய ராஜகோபால் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த கொலை குற்றத்தில் தொடர்புடைய டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் 2009-ம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறைதண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி உத்தரவிட்டது. மேலும், ராஜகோபால் தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றத்தை இழைத்திருப்பதாகவும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. தற்போது பிணையில் இருக்கும் ராஜகோபால், ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.