எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம் தொடர்பாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது முந்தைய உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக ‘எஸ்சி. எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ அமலில் உள்ளது. இம்மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை இச்சட்டத்தின் மூலம் உடனடியாக கைது செய்ய முடியும். இந்நிலையில், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும், கடந்த 2018 மார்ச் மாதம் உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கிற்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு எஸ்சி, எஸ்டி சட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையில் உள்ளது என்றும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த விவகாரத்தை முன்வைத்து, தலித், பழங்குடியின அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரலில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு இன்று அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா, மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், உடனடியாக கைது செய்ய தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம், உச்ச நீதிமன்றம், தனது முந்தைய உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.