உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (64 ) மீது உயர் நீதிமன்றத்தின் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் (வயது 35) ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண், உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரமாக ஒரு கடிதம் எழுதினார். இது குறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியானது. தன் மீதான குற்றச்சாட்டை தலைமை நீதிபதி திட்டவட்டமாக மறுத்தார்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உஸ்தவ் பெய்ன்ஸுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.