சென்னை, செப். 9 - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாற்றத்தை வழக்கமானதாகக் கருத முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார். நீதிபதி தஹில் ரமணியின் இடமாற்றம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவரை இழிவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறையில் வெகுசில பெண் நீதிபதிகளே உள்ள நிலையில், அவர்கள் இத்தகைய அவமானங்களை சந்திக்க வேண்டியிருப்பது கவலை தருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உ.வாசுகி
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, “எதேச்சாதிகாரம், ஆணாதிக்கம், ஜனநாயகமும் வெளிப்படைத்தன்மையும் அற்ற நிலை என அனைத்து அம்சங்களும் மாண்புமிகு தலைமை நீதிபதி தஹில் ரமணி அவர்களின் ராஜினாமாவுக்கு காரணமாக முன் நிற்கின்றன. பில்கிஸ் பானுவிற்கு நடந்த வன்கொடுமைக்கு மும்பை நீதிமன்றத்தில் அவர் அளித்த தண்டனை மேகாலயா இடமாற்றத்திற்கு காரணமென பரவலாக கூறப்படுகிறது. அத்துடன் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் வரும்போது இவர், குறிப்பாக ஒரு பெண், சென்று பார்ப்பதில்லை என்பதும் இடமாற்றலின் ஆணாதிக்க பின்புலமாக இருக்கிறதோ என்ற ஐயப்பாடும் நிலவுகிறது. மிகப்பெரிய உயர்நீதிமன்றத்தில் இருந்து மிகச்சிறிய உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவது எதற்கோ கொடுக்கப்படுகிற தண்டனையும் அவமதிப்பும் தான் என்பதில் சந்தேகமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.சுகந்தி
மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, “நாட்டில் மொத்தம் இரண்டு பெண்கள் தான் தலைமை நீதிபதிகளாக உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி கீதா மிட்டல், தற்சமயம் ஜம்மு-காஷ்மீரில் தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். மற்றொருவர் நீதிபதி தஹில் ரமணி. அநீதி நடக்கும் போது அதை தட்டிக்கேட்க வேண்டிய நீதித்துறையில் தலைமை நீதிபதியாக பணிபுரியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து ராஜினாமா செய்த தஹில் ரமணி, ஒரு நீதிபதி தனது சுதந்திரத் தன்மையை இழக்கும் போது அந்தப் பதவியையே துறக்க தயாராக இருப்பார் என்பதற்கு முன்னுதாரணமாக, திகழ்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.