சென்னை,நவ.15- அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசு நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்க அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பேனர் வைக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், சீன அதிபர் வந்தபோது அரசு சார்பில் பேனர் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனவே அரசு சார்பிலும் தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவ டைந்த நிலையில், வெள்ளியன்று(நவ.15) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், டிராபிக் ராமசாமியின் வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், சீன அதிபர் இந்தியாவிற்கு வந்து சென்றுவிட்டார், இனி இந்த வழக்கில் என்ன உள்ளது? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயர்நீதிமன்ற உத்தரவை அரசியல் கட்சிகளும், தனிநபர்களும் கடை பிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.