tamilnadu

img

சாவியை தொலைத்து விடாதீங்க நிதி அமைச்சரே!

ஆகஸ்ட் 31,2020 அன்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistics Office)வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. 2020 முதல் காலாண்டில் (ஏப்ரல்- ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி - GDP 23.9 சதவீதம் சுருங்கியுள்ளது என்பதே நெருக்கடியின் உச்சத்தை உணர்த்தும் முக்கியத் தகவல் ஆகும்.  இது சுதந்திரஇந்தியா கண்டிராத வீழ்ச்சி ஆகும். இந்த நிலைமைமாறி நேர்மறையான நிலையை எட்ட இன்னும் 6 காலாண்டுகள் வரை எடுக்கலாம் என்று பிரபலஎர்னஸ்ட் & யங் அமைப்பின் தலைமை கொள்கைஆலோசகர் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார் என்பது கவலை தரத்தக்கதாகும். 

இந்த ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5% முதல் 7% வரை சுருங்குவதாய் முடியக் கூடும் என்பது மதிப்பீடு. 1965-68, 1972-73, 1979-80 வரையிலான காலங்களில் இப்படிப்பட்ட சுருக்கங்கள் இருந்தாலும் இவ்வாண்டு சுருக்கமே அதி பெரிய சரிவாக வரலாற்றில் அமையப் போகிறது.கோவிட் காரணத்தால் உற்பத்தி நடவடிக்கைகளே முடங்கிப் போனது ஓர் முக்கியக் காரணி என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அது மட்டுமே காரணமா? ஆனால் மக்களின் வாங்கும் சக்தியின் வீழ்ச்சி,வேலையின்மை எட்டிய உச்சம், சந்தையில் ஏற்பட்ட சுருக்கம் என்பதெல்லாம் கோவிட்டுக்கு முந்தைய காலத்திலேயே தீவிரமாக வெளிப்படத் துவங்கி விட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்“கடவுளின் செயல்” என்று சொல்லித் தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால் அதிலும் ஒரு உண்மை உள்ளது.இவர்களின் பொருளாதாரப் பாதையில் “சந்தைதானே கடவுள்“. 

இன்றைய நெருக்கடிக்கு தீர்வுகள் என்ன என்பதில் இரண்டு விசயங்கள் முக்கியமானவை. ஒன்று வருமானத் திரட்டல் வழிமுறையில் மாற்றம். இரண்டாவது, பொது முதலீடுகளை அரசாங்கம் அதிகரிப்பது. முதல் விசயத்திற்கு வருவோம். அரசின் வருமானத் திரட்டலில் நிறுவன வரி, செல்வ வரி போன்றவைஅதிகரிக்கப்படுவது அவசியமாகிறது. சாதாரண மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள் போன்ற வழி முறைகளில் ஏழை, நடுத்தர மக்களைத்துவைத்து, கசக்கி, பிழிவது இன்னும் கிராக்கியைப் பாதிக்கும்; சந்தையை மேலும் சுருக்கும். அரசு முன்வைக்கிற இன்னொரு வழியே அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை. நஷ்டத்தில் ஓடுகிற நிறுவனங்களை வாங்க தனியார்கள் முன்வருவதில்லை. அரசுக்கு பெரும் பள்ளம் விழுவதால் அது மிகப்பெரிய, லாபகரமான நிறுவனங்கள் மீது கைவைக்கிறது. இவ்வாண்டு பட்ஜெட்டில் ரூ. 2,10,000 கோடிபங்கு விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு இதுவே ஒரு காரணம். ஒரு நியாயமும் இல்லாமல் எல்.ஐ.சியின் பங்கு விற்பனைக்கு முனைவதற்கும் இதுதான் காரணம்.

இரண்டாவது, பொது முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. அரசு பொருளாதாரத்தில் கூடுதலாகத் தலையிடுவது தேவைப்படுகிற காலம் இது. மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு திருச்சி வழியாக வருவதற்கு பதிலாக திருநெல்வேலி நோக்கி வண்டியை விட்டால் என்ன அர்த்தம்! பொது முதலீடுகளை பெருமளவு செய்கிற அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. வேலை உருவாக்கத்தில் அரசு நிறுவனங்கள் ஆற்றி வரும் பங்கிற்கு எல்.ஐ.சி ஓர் உதாரணம். எல்.ஐ.சியைப் பொறுத்தவரையில் அது நேரடியாக உருவாக்குகிற வேலை வாய்ப்புகள் மகத்தானவை. 12 லட்சம் முகவர்கள், 1 லட்சம் ஊழியர்களைக் கொண்ட பெரிய நிறுவனம். ஆனால் அதைவிட எல்.ஐ.சி பொருளாதாரத்திற்கு அளிக்கிற நிதியாதாரங்கள் அளிக்கிற வேலை வாய்ப்புகள் மிக மிக அதிகம். பல லட்சம் கோடி முதலீடுகளை நெடுஞ்சாலை, ரயில்வே, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் போன்ற துறைகளில் எல்.ஐ.சி முதலீடு செய்கிறதென்றால் அவையெல்லாம் எவ்வளவு லட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்ற கோணம் இவ் விவாதத்தில் மிக முக்கியமானது.

கடந்த மார்ச் மாதம் மகாராஷ்ட்ரா தொழில் அமைச்சர் சுபாஷ் தேசாய் “ஒரு கோடி ரூபாய் முதலீடு ஒரே ஒரு வேலை வாய்ப்பையே உருவாக்குகிறது” என்ற கணக்கை கூறினார். இவ் விகிதம் மிகக்குறைவு என்பது அவரது கவலை. ஆனால் அந்தக்கணக்கைப் போட்டால் கூட எல்.ஐ.சி கடந்த 12 வதுஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ. 14 லட்சம் கோடிகள் முதலீடு என்றால் 14 லட்சம் வேலை வாய்ப்புகள் என்றல்லவா பொருள். ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டிற்கான உபரியாக ரூ. 4 லட்சம் கோடிகள் எனில்“வேலை உருவாக்கத்தில்” இதன் பங்களிப்பு எவ்வளவு பெரிது! 

நெருக்கடி என்ற பூட்டைத் திறந்து முன்னேற தவறான சாவிகளை அரசாங்கம் முயற்சித்துப் பயனில்லை. சரியான சாவியைத் தெரிவு செய்ய வேண்டும். அரசு தலையீடு, பொது முதலீடு என்பதுஅதில் மாஸ்டர் கீ. அந்த சாவியை தொலைத்து விடக் கூடாது. 

===க.சுவாமிநாதன்===