கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது. அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது. இதில் முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை மத்தியத் தொல்லியல் துறையும், 4 முதல் 7 கட்ட அகழாய்வுப் பணிகளைத் தமிழகத் தொல்லியல் துறையும் மேற்கொண்டன.
இதில் கீழடியில் செங்கல் கட்டுமானங்கள், உறைக் கிணறுகள், பாசி மணிகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிக் காசு, தாயக்கட்டை, சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், எடைக்கற்கள் எனப் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது.
7-ம் கட்ட அகழாய்வுப் பணி செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அங்குக் கண்டறியப்பட்ட தொல் பொருட்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில், கொந்தகையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு 12 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கீழடியில் அகழாய்வு நடந்த குழிகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். கீழடி அகழாய்வுத் தளம் குறித்தும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் குறித்தும் தொல்லியல் துறையினர் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு விளக்கினர்.