சிவகங்கை:
பயிர்க்காப்பீடு மோசடி குறித்துநடவடிக்கை எடுக்காத கூட்டு றவுத்துறை, வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, தாலுகா செயலாளர் அழகர்சாமி ஆகியோர் ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி ஒன்றியம் நாகமுகுந்தன்குடி பகுதியில் பயிர்க்காப்பீட்டில் ரூ.80 லட்சத்திற்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை கூட்டாக செயல்பட்டுள்ளனர். பயிர்க்காப்பீடு பெற்றவர்களின் பெயர், அடங்கல் விபரம், பெற்ற தொகை ஆகிய விபர பட்டியலை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். சிவகங்கை மாவட்ட கூட்டுறவுத் துறை ஊழலை மூடிமறைக்க முயல்கிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் 2016-17,2017-18,2018-2019,2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான பயிர்க்காப்பீடு பெற்றவர்கள் பெயர், அடங்கல்விபரங்களை இணைய தளத்தில் வெளியிடவேண்டும்.
இப்பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி கூறுகையில்,“சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பகுதியில் பயிர்க்காப்பீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு புகார் செய்தோம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக புகார் செய்த லெட்சுமணன், காத்தமுத்து ஆகியோரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பயிர்க்காப்பீடு முறைகேடு பிரச்சனையில் தலையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளையான்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் சந்தியாகு ஆகியோர் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளனர். பயிர்காப்பீட்டில் நடைபெற்றுள்ள முறைகேட்டை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்” என்றார்.மேலும் அவர் கூறுகையில், “விருதுநகர் மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் தொகை பெறுபவர்கள் பட்டியல் இணைய தளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டுறவு வங்கியிலும் வெளியிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வெளியிட்டுள்ளது போன்று ஏன் சிவகங்கை மாவட்டத்தில் வெளியிடவில்லை” என்றும் கேள்வியெழுப்பினார்.