சிவகங்கை, மே 7- காளையார்கோயில் அருகே விஜயமாணிக்கம் கிராமம் அருகே கண்மாயில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழமையான பொருட்கள் கிடைத்திருப்பதால் தொல்பொருள் துறை ஆய்வு நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-விஜயமாணிக்கம் கிராமத்தில் ஐந்தடி ஆழத்திற்கு கீழ்பழங்கால இரும்பு உலைக் கூடம் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. காற்று உட்புகும் குழாய், உருகிய குழம்புவெளியில் வழிந்தோடிய குழாய் என இரண்டு குழாய்களும் உள்ளன. இரும்புத் தாதுக்கள், உருகிய உலோகக் கசடுகள், எரிமலைக் குழம்பு துண்டுகள் குவியல் குவியலாக நிறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் இங்கு இரும்புத் தொழில் நடைபெற்றுள்ளது என்பது உறுதியாகிறது. கற்கோடாரி, செதுக்கு கருவி, வெட்டுக்கல், கத்துக்கல், உண்டிக்கல் மற்றும்சிறு கருவிகள் இங்கு கிடைத்துள்ளன. எனவே விஜயமாணிக்கம் கிராமத்தில் தொல்பொருள் துறை ஆய்வு நடத்தவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.