tamilnadu

img

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை உடனடியாக துவக்குக!

சிவகங்கை:
கீழடியில் காட்சி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தினர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாவதுகட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுக்கூர் இராமலிங்கம் கூறியதாவது:
கீழடியில் ஆய்வு செய்வதற்கு இனிஎதுவும் இல்லை என்று மத்திய தொல்லியல் துறை ஆய்வை கைவிட்ட நிலையில் தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக மாநில தொல்லியல் துறை சார்பில் நான்காவது கட்ட ஆய்வைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஐந்தாம் கட்ட ஆய்வு நடந்து வருகிறது. இரண்டு இடங்களில்தற்போது ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டதில் ஒரு இடத்தில் பெரும் கட்டிடம் இருந்த
தற்கான சான்றாக இரட்டைச்சுவர் கண்டறியப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் கருப்பு,சிவப்பு வண்ணம் கொண்ட மண்பானைகள் மற்றும் பாசிமணிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடி தற்போது உலகின் கவனத்தை ஈர்க்கத்துவங்கியுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கீழடி ஆய்வும்மையப்பொருளாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு கீழடியிலேயே காட்சி அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இதற்கானப் பணிகள் உடனடியாக துவக்கப்பட வேண்டும். மேலும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட மூன்று கட்ட ஆய்வுகளில் கிடைத்த அரிய பொருட்களையும் இந்த அருங்காட்சியகத்தில் கொண்டு வந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில அரசு தேவையான அளவு கூடுதல் நிதி ஒதுக்கி, விரிவான முறையில் கீழடியில் ஆய்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

கீழடி ஆய்வு தொடர்பான செய்திகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது தருவதன் மூலம் மக்களின் ஆதரவையும் பெற முடியும். இதற்கு கட்டுப்பாடு விதிப்பது முறையல்ல என்று குறிப்பிட்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மு.கந்தசாமி, ஆர்.கே.தண்டியப்பன், வெ.கருப்புசாமி, ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, மாணவர்சங்க மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், தீஒமு மாவட்டச் செயலாளர் பூமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.