கிருஷ்ணகிரி, மே 24-ஓசூர் வட்டத்தில் மார்ச் மாதம் துவங்கியது முதலே தொடர்ந்து தினசரி 2 மணி நேரமாவது மின்வெட்டு நிலவி வருகிறது. வாரத்தில் இரண்டு நாட்களாவது இரவில் 10 மணி வரையுலும் நீடிக்கிறது. பல நாட்களில் காலை ஆறு மணிக்கு முன்பே மின்வெட்டு செய்கின்றனர். இதனால் காலையில் சமையல் வேலைகள் செய்ய முடியாமலும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் இடையூறாகவும், இரவில் பாடம் படிக்க முடியாமலும் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.கடந்த இரண்டு மாதமாக கடும் மின்வெட்டால் தேர்வுக்கு கூட படிக்க முடியாத சிரமத்திற்கு ஆளாகினார்கள். மூக்கண்டப்பள்ளி பேடரப்பள்ளி,எலசகிரி, அரசனட்டி,மத்திகிரி, மிடுகரப்பள்ளி, நவதி குடியிருப் பு பகுதிகள் ,பிகாஷ் நகர், எம்எம் நகர், அம்மன் நகர், கேசிசி நகர், முனீஷ்வர் நகர், அரசுகுடியிருப்பு பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நாட்கள் இரவு 10 மணிக்கு மேல் விடியும் வரை மின்வெட்டு ஏற்பட்டு புழுக்கம், வியர்வை, கொசுத் தொல்லையில் இரவு முழுவதும் சிவராத்திரி தான்.இதுகுறித்து மின் வாரியப் பணியளர்களிடம் கேட்டால் குறைந்த மின் அழுத்தம் உள்ளதால் தான் இந்த மின்வெட்டு என்கிறார்கள். மின்சார வாரிய அலுவலர்களிடம் கேட்டால் இதோ, அதோ, சரி செய்துவிடுகிறோம் என்று அதே பல்லவியை பாடியே இரண்டு ஆண்டுகளை கடத்தி விட்டார்கள். ‘ரோம் நகரம் தீப்பற்றி எரியும்’ போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக.... இபிஎஸ். ஓபிஎஸ் ன் கூட்டத்தினரும் மாநிலத்தில் மின் வெட்டே இல்லை என ஏகடியம் (எகத்தாலம்) பேசுகிறார்கள்.மறுபக்கம் வேடனுக்கும் நாகத்திற்கும் இடையில் மாட்டிக் . கொண்ட கலைமானைப் போல மோடியின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டிக்கும் - தமிழக அரசின் மின் வெட்டு, தாரு மாறாக ஏற்றப்பட்ட மின் கட்டணதிற்கும் இடையில் மாட்டி ஓசூர் சிப்காட் சிறு குறு நடுத்தர தொழில்கள் தற்கொலைக்கு ஆளாகியுள்ளன. ஏற்கனவே, ஓசூர் சிப்காட்டில் சுமார் ஐநூறு சிறு குறு நடத்தர தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது ஏற்பட்டு வரும் கடும் மின்வெட்டால் இன்னும் மிச்சம் மீதி தப்பித்தோம், பிழைத்தோம் என்றிருந்த இன்னும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள், அழிவின் விளிம்பில் தள்ளாடுகிறது.சிறு குறு தொழில்களை, தொழில் முனைவோர்களை காப்பாற்றிட மத்திய மாநில அரசுகள் சிறு குறுந்தொழில்களுக்கு ஜி.எஸ்டி யிலிருந்து விளக்களிக்க வேண்டும், கடந்த பல மாதங்களாக ஏற்பட்டுள்ள கடும் மின்வெட்டை நீக்க வேண்டும், சிறுகுறுந் தொழில்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் குறைந்த வட்டியில் விரைந்து கடன் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.குடியிருப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் மின்வெட்டை தடுத்து தினமும் வீடுகளுக்குள் ஏற்பட்டுவரும் சிரமங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் , தொழில்களையும் தொழில் முனைவோர்களையும் பாதுகாக்க ஜிஎஸ்டியை நீக்க வேண்டும், மின்வெட்டைபோக்க வேண்டும், குறைந்த மின் அழுத்தத்தை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன் வலியுறுத்தினார்.மின்வெட்டு, குறைந்த மின் அழுத்தம் குறித்த பிரச்சனையில் இருந்து சிறு தொழில் முனைவோர்களை பாதுகாக்க வேண்டும் என்று ஹோஸ்ட்டியா சங்கத் தலைவர் வேல்முருகன்,சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள்.