சென்னையில் நடைபெறும் சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு வெற்றிபெற ஜார்கண்ட் முதலமைச்சரும் சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட ஜார்க்காண்ட் நிலக்கரி தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவருமான ஹேமந்த் சோரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென்னுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் காரணமாக சிஐடியு மாநாட்டில் கலந்துகொள்ளமுடியவில்லை. எங்களது கட்சியின் தொழிற்சங்கம் சார்பாக பாகு பேசிரா, ஜெய் நாராயன் மஹாட்டோ ஆகியோர் பிரதிநிதிகளாக சிஐடியு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். சிஐடியு மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் ஒடுக்கப்பட்ட பழங்குடியினர் மற்றும் நாட்டில் உள்ள உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழவும் புதிய திசையைக் காட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாடு முழுவதிலும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 4ஆயிரம் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநாட்டில் பங்கேற்றுள்ள 2ஆயிரம் பிரதிநிதிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்துச்செய்தியில் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.