சேலம்:
மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியை கடந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வந்துகொண்டிருப்பதால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப் படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியுள்ள நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 62,225 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாகவும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்துவினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் புதனன்று (ஆக.14) அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக உள்ளது. கர்நாடக மாநில அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட வேண்டிய நிலை நிலவுவதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.