இளம்பிள்ளை, மே. 6 - கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இளம்பிள்ளை அருகே கள்ளச் சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார். கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் போதை ஆசாமிகள் சிலர் தங்கள் வீட்டிலேயே பானையில் ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்த புகாரின்பேரில் மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி ஆசாரிகடை தெரு பகுதியில் கந்தசாமி மகன் கணேசன் (38) என்பவர் தனது வீட்டில் பானையில் ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார், கணேசன் வீட்டில் வைத்திருந்த 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து கைது செய்தார்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு இடங்கண சாலை மற்றும் மாட்டையாம்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.