tamilnadu

img

நலவாரிய பலன்கள் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேலம்,மே 4-  ஆட்டோ தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நலவாரிய பலன்கள் ஏதும் தற்போது வரை கிடைக்காததால், அரசு அறிவித்த நலவாரிய பலன்களை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வந்தது. இத்தொழிலை நம்பியே அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். இந்நிலையில் உலகயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியால் ஆட்டோ தொழில் முழுமையாக பாதிப்பு அடைந்தது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையில் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணம் சேலம் மாவட்டம் முழுமையும் 90 சதவிகித தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் அறிவித்ததன் அடிப்படையில் இரண்டு மாதங்கள் ஆகியும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காததை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர். 

அந்த மனுவில் தற்போதைய சூழலில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும், அரசு அறிவித்த நிவாரண நிதி ஆயிரம் ரூபாயை உயர்த்தி 5 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும், நலவாரிய அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் தொழிலாளர்களிடம் அநாகரிகமாக நடந்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நலவாரிய அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் தொழிலாளர்களின் மனுக்களை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.