சேலம்,ஆக.09- மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கா்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை மற்றும் நுகு அணை ஆகிய அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இருமடங்காக அதிகரித்து வினாடிக்கு 1லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீா்மட்டம் 5 அடி உயர்ந்து 75.83 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நொடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 37.92 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.