tamilnadu

img

காவிமயம் ஆக்கப்பட்ட பாடங்கள் நீக்கம்!

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில், பாஜக ஆட்சியிலிருந்த போது, பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில், வரலாற்றைத் திரித்து ஏராளமான பொய்களை அள்ளி இறைத்திருந்தது. மாணவப் பருவத்திலேயே இந்துத்துவா மதவெறியைத் திணிக்கும் முயற்சியாக பாடத்திட்டங்களையும் மாற்றியமைத்து இருந்தது.

இந்நிலையில், பாஜக அரசு பாடப்புத்தகங்களில் செய்திருந்த வரலாற்று மோசடிகளை, தற்போதைய காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில பாடப்புத்தகங்கள் முழுமையாக காவிமயம் ஆக்கப்பட்டிருந்த நிலையில், விரைந்து செயல்பட்டு, 3 மாதங்களுக்குள் அவற்றைச் சரிசெய்துள்ளார்.பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில், “விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கரின் பங்கு அளப்பரியது; அவரின் வீர தீர செயல்களினால், அவருக்கு வீர் பட்டம் வழங்கப்பட்டது” என்றெல்லாம் பொய்யான தகவல்களை முந்தைய பாஜக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அவை நீக்கப்பட்டு, சாவர்க்கரின் உண்மையான வரலாறு என்ன? என்று தற்போது விளக்கப்பட்டுள்ளது.“விநாயக் தாமோதர் சாவர்க்கர், வி.டி. சாவர்க்கர் என்று குறிப்பிடப்படுகிறார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, தன்னை விடுதலை செய்யக்கோரி, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 4 கருணை மனுக்களை எழுதிக் கெஞ்சினார்; 1911, நவம்பர் 14-ஆம் தேதி எழுதிய இரண்டாவது கருணை மனுவில், ‘தான் போர்ச்சுகலின் மகன்’ என்றெல்லாம் குறிப்பிட்டு மன்றாடினார்; அதைத்தொடர்ந்து சிறையிலிருந்து விடுதலையான சாவர்க்கர், 1942-ஆம் ஆண்டில், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் காட்டிக் கொடுத்தார்; மகாத்மா காந்தியை படுகொலை செய்த (1948) கோட்சேவுக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையானார்” என்று உண்மையான வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.

இதேபோல, 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்திலும், “மத்திய மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், பயங்கரவாத அமைப்புகளிடம் பணப்புழக்கம் குறைந்து, அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. வெளியுறவு கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன” என்று பாஜக ஆட்சியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
சாதிய மற்றும் வகுப்புவாத அமைப்புக்கள் (Casteism and Communalism) என்ற பிரிவில், இஸ்லாமிய அமைப்புகளான ஜமாத் இ இஸ்லாம், சிமி உள்ளிட்ட அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், பணமதிப்பு நீக்க பெருமை பேசியிருந்த, பாஜக அரசின் பாடத்திட்டங்கள் அடியோடு நீக்கப்பட்டு இருப்பதுடன், இந்தியாவில் மக்களை பிரித்தாளும் அமைப்புகளின் பட்டியலில், ஜமாத் - இ- இஸ்லாம், சிமி அமைப்புக்களுடன், இந்து மகாசபையையும் சேர்க்கப்பட்டுள்ளது.அசோக் கெலாட் அரசின் இந்த நடவடிக்கைக்கு, பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வரலாற்று நாயகர்களை இழிவுபடுத்தி விட்டதாக புலம்பித் தவித்துள்ளனர்.ஆனால், “புதிய பாடப்புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் நிபுணர்களின் ஆலோசனையின்படியே மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை” என்று ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தொடசாரா கூறியுள்ளார். கடந்த பாஜக ஆட்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் புகழ் பாடுவது போன்றே மாணவர்களின் பாடத்திட்டங்கள் இருந்தன; அவற்றை மட்டுமே மாற்றியமைத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.