tamilnadu

img

பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான படைப்பாளி தோழர் டி.செல்வராஜ்

உலகில் 600 கோடி  மனிதர்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு கதைக் களம். ஊருக்கு 10 எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஆட்சியாளர்களுக்கு அடிமைச் சேவகம் புரிவதற்காகவே எழுதி பாராட்டும் பரிசுகளும் பெறுகிறவர்கள் மத்தியில் மக்களுக்காக மக்களின் கதைகளை எழுதுகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய வரிசையில் நாவலாசிரியர் டி.செல்வராஜும் ஒருவர். சென்னையில் வழக்கறிஞர் தோழர் வெங்கட்ராமனிடம் இளம் வழக்கறிஞராக தனது பணியை துவக்கினார். 1958 முதல் 62ம் ஆண்டு வரை ஜனசக்தி நாளிதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். தமிழகத்தில் முதன் முதலில் சாதிமறுப்பு திருமணங்களை கம்யூனிஸ்ட்டுகள் துவக்கி வைத்தார்கள். அதன் தாக்கத்தில் இவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.  பொதுவாக கருப்பு உடையணிந்து கொண்டு நீதியின் காவலராக இருப்பதில்  வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பெருமைபடுவது உண்டு. ஆனால் நீதிமன்றத்தில் கிடைக்காத நீதிக்காக, மறுக்கப்பட்ட நீதிக்காக, போராடும் தொழிலாளர்களுக்கு நீதி பெற்று தருவதை - அதற்காகப் போராடுவதை பெருமையாக எண்ணிச் செயல்பட்டதோடு பல வழக்குகளில் வெற்றிக் கனியை பறித்து தந்தவர் தோழர் செல்வராஜ். நீதிக்காக குரல் கொடுப்பதிலும் மறுக்கப்பட்ட விளிம்பு மனிதனின் நீதியை, ஏக்கத்தை, புதினமாக பதிவு செய்வதும் - என இரண்டு தளங்களிலும் பயணம் செய்தவர் அவர்.  பிரெஞ்சு எழுத்தாளர் மாபசான், ரஷ்ய எழுத்தாளர்கள் மாக்சிம் கார்க்கி, ரஷ்கின், டால்ஸ்டாய் உள்ளிட்டோரின் உலக இலக்கியங்களை படித்து உள்வாங்கினார். அவர்களைப் போல பிரபல எழுத்தாளராக வலம்வர தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். உழைப்பாளி வர்க்கத்தின் உன்னத லட்சியமான கம்யூனிசத்தின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக மார்க்சை நேசித்தார். தனது அறையில் இருக்கைக்கு மேலே மார்க்ஸ் உருவச்சிலை அவரைக் காணச் செல்லும் எல்லோரையும் ஈர்க்கும். நெல்லையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயலாற்றிய அவருக்கு எழுத்துலக நாயகர்கள் சிதம்பரரகுநாதன், திகசி, வானமாமலை போன்றவர்களின் நட்பு கிடைத்தது. புதுமைப்பித்தனின் சிறுகதைகளை விரும்பி படித்ததோடு 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை படைக்கவும் செய்தார்.  விவசாயிகளின் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது மலரும் சருகும். தோட்டத்தொழிலாளர்களின் கண்ணீர் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட தேநீர், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலை தோட்டங்களில் பகாசூரக்கம்பெனிகளின் டீ எஸ்டேட்டுகளில் வேலை செய்த கூலித் தொழிலாளர்களின் பிரச்சனையை சொன்னது. குடும்பம் குடும்பமாக ஆடுமாடுகளைப் போல கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டு கங்காணிமுறையில் சிதைந்த மனிதர்களைப் பற்றி இந்த நாவலில் விரிவாக எழுதினார்.   நெருக்கடி நிலையின் கொடுமைக்கெதிராய் குரல் கொடுத்த மூலதனம், திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட தோல், மற்றும் நோன்பு, நிழல் யுத்தம், பொய்க்கால்குதிரை உள்ளிட்ட 6 நாவல்களை எழுதியுள்ளார். இறுதியாக மனிதனின் சாதிய படிநிலையை தோலுரிக்கும் அடுக்கம் என்ற நாவலை எழுதி அதனை பதிப்பிற்கு கொடுத்ததோடு தனது எழுத்துப்பணியை நிறுத்திக்கொண்டு விட்டார். அவரது அத்தனை படைப்புகளின் தாக்கம் குறையாத போது அடுக்கம் இதைவிட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.   கம்யூனிச இயக்கத்தில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஓரங்க நாடகங்களை எழுதினார். டி.கே.பாலசந்திரன் போன்ற கலைஞர்கள் நாடகங்களை அரங்கேற்றினர். பாட்டு முடியுமுன்னே என்ற இவரது நாடகத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதியுள்ளார். இவரது கம்யூனிச ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பு உணர்வையும் கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளியாகும் ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ பகுதியில் எழுதியுள்ளார்.  2012ம் ஆண்டு தன்னுடைய தோல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததாக அவரிடம் நெருக்கமான தோழர்கள் சொல்லும் போது அவர் அதை நம்பவில்லை. என்னுடைய நாவல்களுக்கு அப்படியெல்லாம் விருது கிடைக்காது; அதை உறுதிப்படுத்தி சொல்லுங்கள் தோழர் என்றார். ஏனென்றால் ஆளும் வர்க்கம் தொழிலாளர்களின் படைப்புகளுக்கு அவ்வளவு எளிதாக விருதுகள் கொடுக்காது என்பது மட்டுமல்ல, அந்த விருது வழங்கும் தேர்வுக்குழுவில் நடைபெறும் போட்டிகளைப் பற்றி முழுமையாக அறிந்தவர் என்ற அடிப்படையில் நம்பவில்லை. ஏராளமான படைப்புகளை அவர் எழுதியிருந்தாலும்  திண்டுக்கல் நகரத்தில் தோல் தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக தோழர். ஏ.பாலசுப்ரமணியம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை எழுத அதிக சிரத்தையெடுத்துக்கொண்டார். சிற்பி சிலையை செதுக்குவது போல பாத்திரங்களை செதுக்கி செதுக்கி கொண்டு வரப்பட்ட  புதினம் தான் தோல். உழைப்பாளி வர்க்கம் தங்கள் தோளில் சுமந்து போற்றக்கூடிய மிக அற்புதமான  அதி உன்னதமான நாவலைப் படைத்த அவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளத்திலும் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன.  ராஜராஜ சோழனை பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் பெருமை பேசுகிறார்கள். பொன்னியின் செல்வன் நாவல் போற்றுகிறவர்கள், விழுந்து விழுந்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ராஜராஜன் காலத்தில் பலி கொடுப்பதற்காக ஆயிரம் பஞ்சமர்களை விரட்டி விரட்டி வேட்டியாடிய வரலாற்றை, தனது தோல் நாவலில் பதிவு செய்த முதல் நாவலாசிரியர்  தோழர் டி.செல்வராஜ் தான். 117 கதாபாத்திரங்களை அசை போட்டு நம்மிடையே நிஜங்களாக உலவவிட்டார். பொதுவாக நாவல்களில் அடக்கப்பட்ட பெண்களின் பிம்பங்களையும், ஆணாதிக்க மனிதர்களையும் சித்தரிப்பதையுமே பார்க்க முடியும். ஆனால் டி.செல்வராஜ். நாவல்களில் பெரும்பாலும் பெண் பாத்திரங்களை  வீராங்கனைகளாகவே உயர்த்தி முற்போக்கு சிந்தனையாளர்களாகவே உயர்த்தி காண்பிப்பார். இந்த நாவல் தோல்பதனிடும் தொழிலாளர்கள் போராட்டத்தை தலைமை தாங்கிய தலைவர்களை மட்டுமல்ல, தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தலைமை தாங்கிய நடத்திய அனைத்து போராட்டங்களையும் நினைவுபடுத்தும் படியான நடையுள்ள ஒரு நாவலாகவே படைத்திருப்பார். இவன் பஞ்சமன், இவன் சூத்திரன் என்று பேதம் பார்க்கிற, தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று காலம் காலமாய் இருந்து வருகிற  சனாதன சமூகத்தில், பிராமண சமூகத்தில் கூட பிணத்தை தூக்கிச் செல்ல அதே சாதிக்குள் தீண்டாமை அனுபவித்து வரும் சவுண்டிகள் வாழக்கூடிய சமூகத்தில் ஒரு ‘பிராமணன்’ தலித் பிணத்தை தனது தோளில்  தூக்கிக்கொண்டு ஆதிக்கச் சமூகத்திற்கு எதிராக - தீண்டாமைக்கெதிராக வீறு நடைபோட்ட மகத்தான தலைவன் தோழர் ஏ.பாலசுப்பிரமணியத்தை நினைவுபடுத்தும் கதாபாத்திரங்களை தோல் நாவல் ஓங்கி ஒலித்தது. இந்த ஒரு நாவல் சொல்ல வந்த பாத்திரங்களைப் போல  இதற்கு முன் வேறு எந்த நாவலும் சொல்லவில்லை. இனியும் சொல்லப் போவதுமில்லை. பொதுவாக எழுத்தாளர்களுக்கு ஒரு கர்வம் இருக்கும். அந்த கர்வம், ஆதிக்க சமூகமும் அரசும்  கௌரவப்படுத்தும் பாத்திரங்களைப் படைத்து அதன் மூலம் பரிசில் பெறுகிற போக்குள்ளவர்கள் மத்தியில் தோழர் டி.செல்வராஜ். எழுதிக் குவித்த இலக்கிய மலையை நிமிர்ந்து பார்த்தால் அந்த அடுக்கின் உயரத்தில், சிம்மாசனத்தில் தொழிலாளி வர்க்கம் அமர்ந்திருக்கும். அந்த அளவிற்கு தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து தொழிலாளி, விவசாயிகளின் வர்க்க போராட்டங்களை படைப்புகள் ஆக்கியவர் தோழர் டி.செல்வராஜ்.

இலமு, திண்டுக்கல்