தஞ்சாவூர் ஏப்ரல்.01-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக்குழு சார்பில், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவுக்கு கோரிக்கை மனுவை மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,
அய்யா, வணக்கம். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரவு அளிக்கிறது.
ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற சிரமங்களை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேலும் அடியிற்கண்ட கோரிக்கைகளையும் பரிசீலித்து ஆவண செய்ய வேண்டுகிறோம். நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக கிராம அளவில், வட்டார அளவில், நகரங்களில் வார்டு அளவில் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய நோய் தடுப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்து செயல்படுத்திட வேண்டும்.
அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் முறையாக மக்களிடம் வினியோகம் செய்யப்படுவதற்கு மேற்குறிப்பிட்டுள்ள குழுவை பயன்படுத்துவது.
கிராமப்புறங்களில் விவசாயப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்கும், நோய் பரவாமல் சமூக விலகலோடு கூடிய தடுப்பு எச்சரிக்கையுடன் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
நூறு நாள் வேலைத்திட்ட சம்பள பாக்கியை உடனடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்திட வேண்டும்.
காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்களது விளை பொருட்களை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். விளைந்த பொருட்களை வாகனங்கள் மூலம் ஏற்றிச் சென்று விற்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
விளைந்த வாழை, வெற்றிலையை விற்க முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிப்பை முறையாக கணக்கீடு செய்து உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
கோடை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஆவன செய்திட வேண்டும்.
நெல், பருத்தி ஆகியவற்றின் பயிர்க்காப்பீடு காலத்தை ஏப்ரல் வரை நீடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்திட வேண்டும்.
கிராமப் புறங்களில் உள்ள மளிகை கடைகளில் மளிகைப் பொருள்கள் தட்டுப்பாடு இன்றி முறையாக கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும். செயற்கையான விலை உயர்வை தடுத்து நிறுத்திட வேண்டும்.
கிராமப் புறங்களில் ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்திட வேண்டும். கிராமப் புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப் படுகின்ற நிவாரணத்தொகை நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாத தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
நகரங்கள், கிராமங்களில் அனைத்து பகுதி மக்கள் மத்தியிலும் நோய் தடுப்பு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நகர்ப்பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்க வேண்டும்.
அவசரத் தேவைகளுக்கு திருமணம், இறப்பு, நோயாளிகள் சிகிச்சை பெற வெளியில் அல்லது வெளியூர் செல்வதற்கு வட்டாட்சியரிடம் அனுமதி பெறுவது என்பது சாதாரண மக்களுக்கு சாத்தியமானதாக இல்லை எனவே உள்ளூர் அளவில் வி.ஏ.ஓ அளவிலான அரசு அலுவலரின் அனுமதி பெற்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும் " இவ்வாறு அம்மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது