இராமநாதபுரம்:
கொரோனா தாக்கத்தால் வேலையிழந்துள்ள தையல் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென தையல் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.ஞானசேகர் விடுத்துள்ள அறிக்கை:-
தமிழ் நாட்டில் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பகுதியினர் பெண்கள். கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைப்பெண்கள் என மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வாரியத்தில் பதிவு செய்த, தையல் கலைஞர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பள்ளிச்சீருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கொரோனா வைரஸ் நிவாரணமாக ரூ.5,000 தமிழக அரசு வழங்க வேண்டும். இலவச பள்ளிச் சீருடை2019 -ஆம் ஆண்டுக்கு தைத்த நான்கு செட் துணிக்கான கூலியையும் உடனடியாக வழங்கவேண்டும்.