அறந்தாங்கி, அக்.31- அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் 360 க்கும் மேற்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் இப்பகுதி வீட்டின் மேற்கூரைகள் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுகிறது. இந்நிலையில் மழைக் காலத்தை யொட்டி அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு தங்களது பொருட்களை எடுத்துச் செல்ல முயற்சித்த பொழுது ஆத்மநாதன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்பட பல வீடுகளில் கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் பொருள் எடுக்கச் சென்ற சிவா, ராவுத்தர் ஆகியோர் மீது மேற்கூரை விழுந்து காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரி விக்கப்பட்டு காயமடைந்த இருவரையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அரசு தரப்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில் உயிர் சேதம் உள்ளிட்ட பாதிப்பிலிருந்து காத்து கொள்ள வீடுகளை புதுப்பித்து கட்டித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.