மதுரை,அக்.31- தமிழகத்தில் பருவமழை தீவிர மடைந்து, நீர்வரத்து அதிகரித்துள்ள தால் அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்ட பெருஞ் சாணி அணையில் இருந்து நீர்திறப்பு 3 ஆயிரம் கன அடியும், சிற்றார்- 1 அணையில் இருந்து 536 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது. இதனால் பரளி யாறு, தாமிரபரணி ஆறு ஆகியவற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் கடையம் அருகே பெய்த மழையால் ராமநதி அணை தனது முழுக் கொள்ளளவான 84 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி பெரிய மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். திண்டுக்கல் அய்யம்பாளையம் மருதாநதி அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 70 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 74 அடி கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 60 அடியை எட்டியுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வைகை அணையின் தரைப் பாலத்திற்கு மேல் மழைநீர் செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக கோவை மாவட்டம் பேரூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பட்டீஸ்வரர் ஆலய படித்துறை அருகே உள்ள தரைப் பாலத்தின் மீது தண்ணீர் ஓடுகிறது. வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்ட தால் பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் முழு வதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியான அய்யனார் கோவில் மற்றும் இராக்காச்சி அம்மன் கோவில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வெள்ளம்போல் தண்ணீர் கொட்டு கிறது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொசஸ்தலை மற்றும் அடையாறு, வெள்ளாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர அணைகளை கண்காணிக்குமாறு பொதுப்பணித்துறை- பேரிடர் மேலாண்மை துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.