tamilnadu

img

மதக்கலவரத்தை தூண்டும் பாஜக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இராமநாதபுரம்:
இராமநாதபுரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் பாஜக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை வெளியிட்டுள்ள அறிக்கை:-

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி இராமநாதபுரத்தில் அருண்பிரகாஷ் என்ற நபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தனிநபர் விரோதங்களால்  (இந்து - முஸ்லிம் இணைந்து) நடந்திருக்கிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உரிய நேரத்தில் தலையிட்டு விளக்கமளித்துள்ளார்.அருண்பிரகாஷ் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதால் கொலை செய்யப்பட்டார் என எச்.ராஜா போன்ற பிஜேபி தலைவர்கள் இணையதளங்களில் பொய்யான பதிவுகளை போட்டு பிரச்சாரம் செய்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடை செய்யப்பட்டிருந்தபோது, இராமநாதபுரத்தில் எப்படிக் கொண்டாட முடியும்?

கடந்த 15 ஆண்டுகளாக இராமநாதபுரம் மாவட்டத்தில் எப்படியாவது மதமோதலை உருவாக்க பிஜேபி - சங்பரிவார் அமைப்புகள் வதந்திகளை பரப்பினாலும் அவர்களது சூழ்ச்சி மக்கள் மத்தியில் எடுபடவில்லை.22.6.2017- அன்று பிஜேபி இராமநாதபுரம் நிர்வாகி அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை முஸ்லிம் பயங்கரவாதிகளால் பயங்கரமாக தாக்கப்பட்டதாகவும், அதன்பின் அவர்கள் பள்ளிவாசல் தொழுகையிலும் கலந்து கொண்டதாகவும் எச்.ராஜா பிரச்சாரம் செய்தார். இதையொட்டி பெண்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலில் பிஜேபி பரிவாரம் தாக்குதல் நடத்தியது. அதை காவல்துறை தடுத்து நிறுத்தியது.அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை மீதான தாக்குதலுக்கு காரணம்  பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு என்றும் அவர்கள் இந்துக்களில் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் என காவல்துறை உறுதி செய்தது. எனினும் அருண்பிரகாஷ் கொலை குற்றவாளிகளில் நான்கு பேர் முஸ்லிம்கள். மூன்று பேர் இந்துக்கள். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் கஞ்சா போதை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அனைவரையும் முஸ்லிம் என முத்திரை குத்தி, மதக் கலவரத்தை உருவாக்க பிஜேபி செய்த திட்டம் அம்பலமாகிவிட்டது. இதில் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.அரசியல் லாபத்திற்காக பொய்யான செய்திகளை பரப்பி மதமோதலை உருவாக்கிட அலையும் பிஜேபி தலைவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.