புதுக்கோட்டை, ஜூன் 3-பணியில் இருக்கும் போது பாம்பு கடித்து இறந்த போக்குவரத்துத் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்இழப்பீடும், வாரிசுக்கு அரசு வேலையும் வழங்கக் கோரி புதுக்கோட்டையில் சிஐடியு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில் தஞ்சாவூரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்தஏப்ரல் 30 அன்று பணியேற்பதற்காக கந்தர்வகோட்டை பணிமனைக்கு வந்தார். அங்கு உள்ள கழிப்பறைக்குச்சென்று வரும் போது எதிர்பாராதவிதமாக பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பணியில் இருக்கும் போது உயிரிழந்த தொழிலாளி புண்ணியமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், வாரிசுக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும். பணியில்இருக்கும் போது மரணமடைந்தவரின் இறப்புக்குச் சென்ற தொழிலாளர் களுக்கு போடப்பட்ட ஆப்சென்டை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரசுப் போக்குவரத்துக் கழகபுதுக்கோட்டை மண்டல அலுவலகம்முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம்(சிஐடியு) மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். சம்மேளன செயலாளர் ஆர்.வாசுதேவன், மண்டலப் பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திசிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், செயலாளர் க.முகமதலிஜின்னா ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் டி.சந்தானம், ஏ.செல்வராஜ், எஸ்.சாமிஅய்யா, வி.ஆறுமுகம், கே.சிவக்குமார் ஆகியோர் பேசினர். மண்டலப் பொருளாளர் ஆர்.மணிமாறன் நன்றி கூறினார்.