புதுக்கோட்டை, அக்.16- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட ஆயத்த மாநாடு புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மத்திய அரசின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ. 9 வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டரை அரசே நேரடியாக மையங்களுக்கு வழங்க வேண்டும். உணவு மானியத் தொகையை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 26 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தை நடத்தவுள்ளனர். போராட்டத்தை வெற்றிகரமாக நடத்ததுவதற்கான போராட்ட ஆயத்த மாநாட்டிற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமை வகித்தார். கு.ராஜமாணிக்கம், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் பி.பாண்டி தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பெ.அன்பு கோரிக்கைளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலளார் ஆர்.ரெங்கசாமி வாழ்த்திப் பேசினார். முன்னதாக மவாட்ட துணைத் தலைவர் துரை.அரங்கசாமி வரவேற்க, மாவட்டப் பொருளாளர் வி.அன்னபூரணம் நன்றி கூறினார். மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.