அறந்தாங்கி, ஏப்.8-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலை அரசு மருத்துவமனை அருகே அழியா நிலை பிரிவு சாலை முக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையின் தலையை உடைத்து சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர்.திங்கள் காலை தலை இல்லாத பெரியார் சிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த திராவிட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவியது.சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக மண்டல தலைவர்ராவணன் தலைமையில் பட்டுக் கோட்டை சாலையில் உடைக்கப்பட்ட சிலை முன்பு அமர்ந்து மறியல் செய்தனர். குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஆலங்குடி திமுகசட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், திமுக முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள் உதயம் சண்முகம், கவிதை பித்தன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் முபாரக் அலி, காங்கிரஸ் நகர தலைவர் வீராசாமி, விடுதலை சிறுத்தை கட்சியினர், திராவிட கழ கத்தினர் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் ஏராள மானோர் உடைக்கப்பட்ட சிலை முன்புகாத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.அப்பொழுது சிலையை மூடுவதற்கு போலீசார் ஈடுபட்டனர். அதை கண்டித்து கோஷம் எழுப்பியதால் அந்தமுயற்சியை போலீசார் கைவிட்டனர். இதுகுறித்து ஆலங்குடி சட்ட மன்ற உறுப்பினர் மெய்யநாதன் கூறியது, திரிபுரா மாநிலத்தில் கடந்தஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மாநிலத்தில் பிரதான இடத்தில் இருந்த லெனின் சிலை புல்டோசர் மூலம்அகற்றப் பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனதுசமூக வலைதளத்தில் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப் படும் என கருத்து பதிவிட்டிருந்தார்.அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியார் சிலை உடைக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதியில் இருந்த பெரியார் சிலை கடந்த ஆண்டு இதே மாதத்தில் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இது போன்று தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிபிஎம் கடும் கண்டனம்
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள்முதல் அறந்தாங்கி நகரத்தில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் பெரியாரை அவமானப்படுத்தும் விதமாக பேசியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வந்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இப்பகுதியில் மக்கள் செல்வாக்கைப் பெற முடியாத இந்துத்துவா ஆதரவாளர்கள் பெரியார் சிலையை உடைத்து இழிசெயலில் ஈடுபட்டுள்ளனர்.
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டது. இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களின் எதிர்ப்பு மிகக் கடுமையாக உள்ளது.
மேலும் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை தரம்தாழ்ந்து விமர்சித்ததும், பெரியாரின் சிலையை உடைப்பேன் என்றும் எச்.ராஜா போன்றவர்கள் கடந்த காலங்களில் மேடையில் பேசியதும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும் மக்கள் மத்தியில் கனலாக எரிந்துகொண்டு இருக்கிறது. இதனால், பாஜக வேட்பாளர்கள் பல இடங்களுக்கு வாக்கு சேகரிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பின்னணியில் இந்த உடைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
இத்தகைய இழிசெயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதுபோன்ற சமூக விரோதச் செயல்கள் மேலும் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கையிலிருந்து..