தக்கலை:
மேல்நிலை வகுப்புகளில் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே முடமாக்க முயற்சிக்கும் புதிய பாடத் தொகுப்பு முறையினை முற்றாகரத்து செய்திட வேண்டுமென தமிழ்நாடு தனியார்பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.அமலராஜன், பொதுச் செயலாளர் டி.கனகராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக அரசு பிறப்பித்தள்ள அரசாணை (நிலை) எண் 166 நாள் 18.9.2019ன் படிமேல்நிலை வகுப்புகளுக்கு புதிய பாடத் தொகுப்பு முறையினை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய முறை தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே முடமாக்குவதோடு உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும் எவ்வகையிலும் உகந்ததல்ல என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
புதிய பாடத் தொகுப்பு முறையை ரத்து செய்வதற்கான காரணங்கள்
பழைய பாடத்தொகுப்பு முறைப்படி மேல்நிலை வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாட பிரிவில் பயின்று நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் நீர் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில் பொறியியல் சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்ய இயலும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய பாடத் தொகுப்பு முறைப்படி மேற்கண்ட வகுப்புகள் இல்லாமல் போகிறது.
பழைய பாடத் தொகுப்பு முறையில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தேர்வு செய்து பயின்று பட்டம் பெற இயலும். புதிய பாடத் தொகுப்பு முறைப்படி அவ்வாய்ப்பு இல்லாமல் போகிறது.
பழைய பாடத் தொகுப்பு முறையில் கலைப் பிரிவில் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் விரும்பிப் பயில்கின்ற வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல்பாடங்களில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில் வரலாறு,பொருளியல், வணிகவியல் போன்று பட்டப் படிப்புகளைத் தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புகளைப் பெற இயலும், தற்போதைய புதிய பாடத் தொகுப்பு முறைப்படி வரலாறு பாடப்பிரிவைத் தேர்வு செய்தமாணவர்களுக்கு கல்லூரிகளில் வணிகவியல் பாடப் பிரிவைத் தேர்வு செய்ய இயலாமல் போகிறது. எனவே பட்டயக் கணக்கர் (C.A.) போன்ற வேலைவாய்ப்புக்கான உயர் கல்வி வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
பழைய பாடத் தொகுப்பு முறையில் கலைப்பிரிவில் வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களைப் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்கும் மத்திய,மாநில அரசுகள் நடத்துகின்ற வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் வரலாறு பாடத்திலிருந்து அதிக மதிப்பெண்களுக்கான வினாக்கள் இடம் பெறுவதால் ஏழை, எளிய மாணவர்கள் பலர் வேலைவாய்ப்பினைப் பெற்றிட வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆனால்புதிய பாடத் தொகுப்பு முறையில் மேற்கண்ட கலைப் பிரிவில் வரலாறு இடம் பெறாததால் மேற்குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் தேர்ச்சி பெறும் வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
பழைய பாடத் தொகுப்பு முறையில்தொழிற்கல்வி பாடப் பிரிவில் ஒரு பாடமாககணினிப் பயன்பாடு அல்லது கணினி தொழில்நுட்பம் என்ற பாடம் இடம் பெற்றுள்ளது. முற்றிலும் கணினிமயப்படுத்தப்பட்ட இன்றைய சூழலில் கணினி அறிவென்பது தொழிற்கல்வி பாடப் பிரிவு பயிலும் மாணவர்களுக்கு மிகவும் இன்றியமையாததும், பயனுள்ளதாகவும் இருந்தது. ஆனால் புதிய தொழில் கல்வி பாடப்பிரிவுகளில் கணினிப் பயன்பாடு அல்லது கணினி தொழில்நுட்ப பாடம் நீக்கப்பட்டுள்ளது. இம்முடிவு மாணவர்களுக்கு பொருளியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்கல்வித் துறையில் பயிலும் வாய்ப்பு பெருமளவுகுறைகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பாடத் தொகுப்பு முறை நடைமுறைப்படுத்தப்படுகின்ற சூழலில் பழைய பாடத்தொகுப்பு முறையும் தொடரும் என்ற தமிழகஅரசின் அறிவிப்பு ஒரே பள்ளி வளாகத்தில் இருவேறு பாடத் திட்ட முறை மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துகிறது. மாணவர்கள் புரியாத வயதில் எண்ணிக்கை குறைவான புதிய பாடத்தொகுப்பு முறையையேத் தேர்வு செய்வர். இதனால் உயர் கல்வியில் பல்வேறு பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை இழப்பதோடு எதிர்காலத்தில் அவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ள போட்டித் தேர்வுகளிலும் நமது தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற இயலாத நிலை உருவாகும்.
மேலும் பழைய பாடத் தொகுப்பு முறைப்படி 14 பிரிவுகளில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் இடம் பெற்றிருந்தது. ஆனால் புதிய பாடத் தொகுப்பு முறையில் இவ்விரு பாடங்களும் 3 பிரிவுகளில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. எனவே கடந்த காலங்களில் மேற்குறிப்பிட்ட 14 பாடப்பிரிவுகளிலும் பயின்ற லட்சக்கணக்கான மாணவ - மாணவியர் இவ்விருபாடங்களுக்கான பரந்துபட்ட அறிவினைப் பெற்றிருந்தனர். ஆனால் புதிய முறையில் 3 பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே விரிவான அறிவினைப் பெறுகின்றனர்.
அதுபோல பழைய பாடத் தொகுப்பு முறையில் 6 பொதுப் பாட பிரிவுகளில் கணிதபாடம் இடம் பெற்றிருந்தது. ஆனால் புதியபாடத் தொகுப்பு முறையில் 2 பொதுப் பாடப்பிரிவுகளில் மட்டுமே கணித பாடம் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வு பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை பாதிக்கின்ற முக்கிய காரணியாக அமையும்.
மேலும் மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களிலும் இதர மாநிலப் பாட திட்டங்களிலும் இந்தியாவிலுள்ள அனைத்து தொழில்நுட்ப, கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும்பல்கலைக் கழகங்களிலும் எந்தவித பாடக்குறைப்புகளோ, பாடப்பிரிவுகளில் மாற்றங்களோ மேற்கொள்ளப்படாத நிலையில் நமதுமாநிலத்தில் மட்டும் மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களை நடைமுறைப் படுத்தும் போது தமிழ்நாடு அரசின்பாடத் திட்டத்தில் படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலமும், உயர் கல்வியும், வேலைவாய்ப்பும் மிகப் பெரிய அளவில் பாதிப்படையும்.
எனவே அரசாணை எண் 166 ஐ உடனடியாக ரத்து செய்வதோடு ஏற்கெனவே நடைமுறையிலுள்ள பழைய பாடத் தொகுப்பு முறையையேத் தொடர்ந்திட வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.