2019 - 20 நிதி ஆண்டின் இந்தியாவின் ஜிடிபி வெறும் 6.3 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என S&P குளோபல் ரேட்டிங் நிறுவனம் கணித்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி பற்றி பல நிறுவனங்களும் தங்கள் கணிப்புகளைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் இன்று S&P குளோபல் ரேட்டிங் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பில், நடப்பு 2019 - 20 நிதி ஆண்டில் 6.3 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி காணலாம் எனக் கணித்து இருக்கிறது. முன்னதாக இதே நிறுவனம் 2019 - 20 நிதி ஆண்டில் 7.1 சதவிகிதம் வளர்ச்சி காணும் என குறிப்பிட்டிருந்தது.
தற்போது இந்தியப் பொருளாதார சரிவு, எதிர்பார்த்ததை விட ஆழமாகவும், பரவலாகவும் இருக்கிறது. மார்ச் ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் வெறுமனே 5 சதவிகிதம் வளர்ந்து இருக்கிறது. மிக முக்கியமாக இந்தியாவில் தனிநபர் நுகர்வு மிகப் பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. இந்த தனிநபர் நுகர்வு தான் கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டு இருந்தன என தன் காலாண்டு அறிக்கையில் சொல்லி இருக்கிறது S&P குளோபல் ரேட்டிங்.