tamilnadu

img

பெரம்பலூர் அருகே சாலையோரம் முத்திரையுடன் கிடந்த வாக்குச் சீட்டுகள்

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சீட்டுகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேவாக்காளர்கள் முத்திரையுடன், வாக்குச்சாவடி மையஅலுவலர்கள் கையொப்பத்துடன் கூடிய 100-க்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் கிடப்பதாக காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சனிக்கிழமையன்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குன்னம்வட்டாட்சியர் சித்ரா தலைமையிலான வருவாய்த் துறையினரும், காவலர்களும் பெரம்பலூர்- அரியலூர் பிரதான சாலையில் உள்ளஒதியம் பிரிவு சாலையில் பார்வையிட்ட போது, சாலையோரம் 113 வாக்குச்சீட்டுகள் கிடந்தது தெரியவந்தது. அங்கு கிடந்த வாக்குச்சீட்டுகளை சேகரித்த வட்டாட்சியர் சித்ரா, குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றுசம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் விசாரணை மேற்கொண்டார். இத்தகவலறிந்த, அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொது மக்கள் அங்கு சென்று அரசு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களுடன் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கொட்டப்பட்டதா அல்லது எண்ணிக்கை முடிந்த பிறகுகொட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.