பாட்னா:
முத்தலாக் தடைச் சட்டமசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம் என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு 17 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு, மத்திய அமைச்சரவையில், ஒரு அமைச்சர் பதவி மட்டுமே தருவோம் என்று பாஜக கூறிவிட்டது. ஐக்கிய ஜனதாதளமோ, ‘ஒரு அமைச்சர்தான் என்றால், எங்களுக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்’ என்று மறுத்து விட்டது.
அதைத் தொடர்ந்து, சமீபகாலமாக, பாஜக - ஐக்கிய ஜனதாதளம் இடையே முட்டல் மோதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்டமசோதாவை, மத்திய பாஜக அரசு கொண்டுவந்தால், அதனை எதிர்ப்போம் என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சி அறிவித்துள்ளது.
ஆரம்பத்திலிருந்தே முத்தலாக் தடை மசோதாவை, ஐக்கிய ஜனதாதளம் கட்சி எதிர்த்து வருவதாகவும், அந்த நிலையைத் தற்போதும் தொடர்வதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.